மட்டக்களப்பில் 32 புதிய பாலங்களை அமைக்க நடவடிக்கை

கிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்’ எனும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக கடந்த வருடம் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை அமைக்கும் செயற்பாடுகள் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினூடாக நடைபெற்று வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய பாலங்களையமைத்தலும், மக்களின் போக்குவரத்துக்களைச் சீர்ப்படுத்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் புளியடிமடு, மணிபுரம், பத்தர்குளம், கரடிப்பூவல் ஆகிய பகுதிகளின் நிலைமைகளை நேற்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் ’வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிமடு பாலம் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்து வருகின்றது.

அந்தப் பாத்திற்கு மேலாக தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள கடவையும் பொது மக்களின் பயணத்திற்கு மிகவும் ஆபத்தானதாகவுள்ளது. எனினும் வேறுவழியின்றி இதன் மூலமாவே மக்கள் பயணித்து வருகின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணச் செயற்றிட்டப் பொறியியலாளர் என். சித்திராதேவியுடன் கலந்துரையாடியதன் விளைவாக அடுத்த வாரம் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கவுள்ளன.

அத்தோடு ‘கிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்’ எனும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக கடந்த வருடம் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை அமைக்கின்ற செயற்பாடுகள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினூடாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், வக்கியல, கண்ணபுரம், கெவிளியாமடுக் கிராமங்களில் 05 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் வெளிப்படுத்தினர். மேலும், 08 பாலங்களை அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை 09 கிராமியப் பாலங்கள் வடிவமைக்கப்டபட்டு தயார் நிலையிலுள்ளன’ என தெரிவித்தார்.