முதலைகளின் வாழ்விடமாக மாறியுள்ள மட்டு வாவியும் அதனால் மீனவ குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளும்


 (இ.சுதாகரன்) வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு கிழக்கு மாகாணத்தின் மீன்பாடும் தேனாடு என போற்றுதற்குரிய அழகிய இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் மட்டக்களப்பு.

 இதற்கு தனிப் பெருமையுண்டு எழுவான் பிரதேசத்தினையும் படுவான் பிரதேசத்தினையும் பிரிக்கின்ற சிறப்பு மட்டு வாவிக்குண்டு அதிகளவான மீன்களின் வாழ்விடமாகக் காணப்படும் மட்டு வாவியானது மறு கணம் மீனவ குடும்பங்களை வாழ வைக்கின்ற முக்கிய இடமாகவும் நிகழ்கின்றது.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் அடிப்படையானது.நிலையான பொருளாதாரத்தினை ஈட்டிக் கொள்கின்ற மனப் பக்குவம் ஏற்படுகின்ற போதுதான் அவர் சார்ந்த குடும்ப முன்னேற்றத்தினை எதிர் கால சவால்களை எதிர் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் வாழ்வுதனை மாற்றியமைக்க முடியும்.

மக்களின் தொழில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்கின்ற உத்தியோகத்தர்கள் காணப்படுகின்ற போதிலும் விவசாயிகள், மீனவர்கள்  மாத்திரமல்லாது அன்றாட வாழ்வினை கஷ்டமான நிலைமையிலும் ஓட்டிச் செல்லும் பல ஏழைகளும் வாழ்ந்துதான் வருகின்றனர்.


இறைபடைப்பில் யாரும் ஏழையுமல்ல வசதி படைத்தவர்களுமல்ல ஒவ்வொருவரினதும் முயற்சிதான் முன்னேறுவதற்கு காரணமாகும்.அடிப்படை வசதி வாய்ப்புக்கள் ஓரிருவருக்கு வசதியினை ஏற்படுத்துகின்ற போதிலும் ஏனையவர்கள் தமது சரீர  உழைப்பு மூலமாகவே உயர் நிலையடைகின்றனர்.

மட்டு வாவியினை அண்டிய பல கிராமங்களில் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்விற்கு உரம் ஊட்டுகின்ற பொருளாதார மையமாக மட்டு வாவி காணப்படுகின்றது.அன்று முதல் இன்று வரைக்கும் மட்டு வாவி மீனவர்களின் குடும்பங்களை வாழ வைக்கின்ற பொருளாதார மத்திய நிலையமாக செயற்படுகின்றமையினைக் காணக் கூடியதாகவுள்ளது.

மீன் பிடிக்கும் முறையும் மீன் இனத்தின் அழிவுகளும்
மட்டு வாவியினை பொறுத்தளவில் நன்னீர் மீன்பிடியாக சிறப்பு பெறுகின்ற போதிலும் .இங்கு கட்டுவலை மூலமாக அதிகளவான மீன்கள் மீனவர்களினால் ஆரம்ப காலங்களில் பிடிக்கப்பட்டு வந்த நிலையில் நவீன மீன்பிடி முறைக்கு ஏற்ற வகையில் தற்போது தடைசெய்யப்பட்ட மீன் பிடி முறைகள் அதிகளவாக பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக இழுவை வலை மற்றும் தன்கூஸ் வலை இநாய் வலை என்ற  மீன்பிடி மூலமாக மட்டு வாவியின் அதிகளவான மீன் இனங்கள் தினமும் அழிவடைந்து வருகின்றமை வேதனை தரக் கூடிய விடயமாகவேயுள்ளது.
நாட்டில் பல்வேறு சட்ட ரீதியான கட்டமைப்புக்கள் உள்ள போதிலும் அவற்றினை நடைமுறைப்படுத்துவதில் திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றமை மேலும் குற்றம் செய்கின்றவர்களுக்கு உரம் உரமூட்டுகின்ற செயற்பாடாகவே உள்ளது. இதனால்  குற்றவாளிகளை தண்டிப்பது கடினமான காரியமாகவேயுள்ளது. அதே போன்றுதான் தடை செய்யப்பட்ட வலைகளை உபயோகித்து மட்டு வாவியில் மீன் பிடிக்கும் மீனவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதனை நிறுத்தி சட்ட ரீதியான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறை அதிகரித்துள்ளது.இதன் தாக்கம் எதிர் காலத்தில் மீனவர்களுக்கே ஏற்படும் என்பதனை மட்டு வாவி மீனவர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

மட்டு வாவியும் முதலைகளின் வாழ்விடமும்

மட்டு வாவி என்பது மீன்பாடும் தேனாடாக ஒரு காலம் போற்றப்பட்டன. .அவ்வாறான வாசனை நிலைமாறி தற்போது  முதலைகளின் இருப்பிடமாக மட்டு வாவி மாறியுள்ளது. என்றுமே இல்லாத அளவிற்கு மட்டு வாவியில் முதலைகள் திட்டமிட்ட வகையில் விடப்பட்டுள்ளன.முதலைகளை வாவியில் விடுவதற்கான திட்டம் வேறாக இருக்கின்ற போதிலும் அது வாவியினை அண்டி வாழ்க்கையினை ஓட்டுகின்ற மீனவ குடும்பங்களில் வயிற்றிலடிப்பதாக கருத முடிகின்றன.

மட்டு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றமையினால்  மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.காரணம் கடந்த இரு வருட காலமாக பலர் முதலைக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதுடன்.பலர் மரணங்களையும். எதிர் கொண்டுள்ளனர்.இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்களே, தோணிகள் மூலமாக மீன் பிடியில் ஈடுபடுகின்ற போதிலும் தோணியினை கடித்து மனிதர்களை இரையாக உண்ணும் சக்தி முதலைக்குள்ளதென்பது அண்மைக் கால சம்பவங்கள் உணர்த்துகின்றன.

மீனவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்
மாமிச உண்ணியாகிய முதலைகள் மட்டு வாவியில் மீனவர்களின் மீன்பிடிக்கு சவாலக உள்ளன.அன்றாடம் மீன் பிடி மூலமாக கிடைக்கப் பெறுகின்ற குறைந்தளவு வருமானத்தினூடாக வாழ்க்கை நடாத்துகின்ற பல குடும்பங்கள் முதலைகளின் அச்சம் காரணமாக தொழிலை இழந்து நிற்கதியாகியுள்ளனர்.

மட்டு வாவியினை அண்டிய பல கிராமங்கள் மீன்பிடியினை பிரதான தொழிலாக மேற்கொள்கின்ற மக்கள் செறிந்து வாழ்கின்ற மீனவ கிராமங்களாகும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.இதற்கு சிறந்த தீர்வாக மட்டு வாவியில் அதிகரித்துள்ள முதலைகளின் பிரவேசத்தினை குறைப்பதற்கு மீன் பிடி துறையுடன் தொடர்பான திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்.

முதலைகளின் தாக்கத்திலிருந்து மீனவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியமானது.அதற்கு ஏற்றவகையில் மாற்று மீன்பிடி நடவடிக்கையில் மீனவர்களை வழிப்படுத்த வேண்டிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதனூடாக பொருளாதார உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.

முதலைக் கடிக்கு உட்பட்டு இறந்தவர்கள் மற்றும் பாதிப்பினை எதிர் கொண்டுள்ளவர்களை இனங்கண்டு அவர்களின் பாதிப்புக்களுக்கு ஏற்ப நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கு துறைசார் திணைக்களங்கள் நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது.

மீனவர்களும் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றுகின்ற தூண்கள் அவர்களினது பாதுகாப்பு அவசியமானது.

மட்டு வாவியில் அதிகரித்துள்ள முதலைகளை கட்டுப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஒன்று படுவோம்.