எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையாது

‘எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றியளிக்காது’ என,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில்,  சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது,

“தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் அக்கட்சிகள் வெறுக்கின்றன.

“இந்த முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியில் செல்லும் நிலைப்பாட்டில் புளொட், டெலோ ஆகிய கட்சிகள் இல்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறமுடியும். ஆனால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றி என்னால் தீர்க்கமான முடிவொன்றைக் கூற முடியாது.

“நெருக்குவாரங்கள் என்பன தற்காலிகமானவை. அவற்றைச் சுமூகமாக முடித்துக்கொள்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். இதனைத் தமக்குச் சாதகமாக்கத் துடிக்கும் சிலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறியலாம் எனக் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது” எனவும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.