கட்டாரில் வாழும் இலங்கையர் அச்சம் கொள்ளத் தேவையில்லை: கட்டார் தூதரகம்

கட்டாரில் வாழும் இலங்கையர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என கட்டார் தூதரகம் நேற்று  (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

கட்டாரில் வாழும் இலங்கையர்களை வெளியேற்ற அரசு தயாராகவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கட்டார் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“கட்டாரில் வாழும் 150,000 இலங்கையரை வெளியேற்ற தயார் நிலையில் அரசு’ எனும் தலைப்பில் கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகேவை மேற்கோள் காட்டி சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்ப்பாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றுடன் இலங்கையிலுள்ள கட்டார் தூதரகம் தொடர்பு  கொண்டு விளக்கம் கேட்டது.

அதன் போது அவர்கள் இந்த செய்தி தவறானது. தற்போதய கள நிலவரங்கள் குறித்து கட்டாரில் வாழும் இலங்கையர்கள் வீணாக அச்சம் கொள்வதற்கான எந்தவித நியாயங்களும் இல்லை என தெரிவித்தனர்.

இவ்வாறான நெருக்கடியான நிலைகளை எதிர் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளையும் கட்டார் அரசு நீண்ட நாட்களுக்கு முன்பே மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இரு நாட்டினதும் உத்தியோகப் பூர்வ ஊடக அறிக்கைகள் மற்றும் உறுதிப் படுத்தப் பட்ட பக்க சார்பற்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் மாத்திரமே இலங்கை – கட்டார் நட்பு உறவுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை கட்டார் தூதரகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.