மட்டு சிறைச்சாலையை மாற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஒப்புதல் - மட்டு அரச அதிபர்


 மட்டக்களப்பு சிறைச்சாலையை புதிய இடத்துக்கு மாற்றுவதுடன், அந்த இடத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வு மற்றும் இந்த சமய கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வு மற்றும் இந்த சமய கலாசார அமைச்சில் நடைபெற்ற நேற்றைய தினம் வியாழக்கிழமை (15) சர் இதனை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், விரைவில் இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு சிறைச்சாலைக்கான கட்டுமான வேலைகள் தொடங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இட வசதிப்பிரச்சினைகள், மற்றும் சிறைச்சாலையின் விஸ்தரிப்பு உள்ளிட்ட விடயங்கள் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டங்களில் பல தடவைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் மட்டக்களப்பு சிறைச்சாலையை மட்டக்களப்பு தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள மான் தீவுக்கு மாற்றுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டபோதும் அப்பிரதேசம் ஒரு பாதுகாக்கப்படவேண்டிய பிரதேசம் என்ற வகையில் மான் தீவுக்கு சிறைச்சாலையினை மாற்றும் தீர்மானங்கள் கைவிடப்பட்டிருந்தன.

அதன் பின்னர் மட்டக்களப்பில் வேறு இடங்களைத் தெரிவு செய்வதென்ற அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு திராய்மடு பிரதேசத்தில் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிறைச்சாலையை மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் கால தாமதம் காணப்பட்டிருந்தது.
இதே நேரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இட வசதிப்பிரச்சினைகள் காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்திருந்தன.

இந்த நிலையிலேயே நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சின் கூட்டத்தில் சிறைச்சாலையை புதிய இடத்திற்கு மாற்றி அதன் காணியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கான முடிவு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.