திருகோணமலையில் பல்கலைக்கழக கல்லூரி: அமைச்சரவை அங்கீகாரம்

திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மைக்கருதி திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் பல்கலைக்கழக கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பில் திறன்விருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி யோசனை முன்வைத்திருந்தார்.

அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 434 மில்லியன் ரூபா செலவில் குறித்த பல்கலைக்கழக கல்லூரி நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.