எல்லைக்கிராமங்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு கல்விச் சமூகம் முன் வர வேண்டும்-கவீந்திரன் கோடீஸ்வரன்

(துறையூர் தாஸன்)

எல்லைக்கிராமங்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு கல்விச் சமூகம் முன் வர வேண்டும்.கல்வியால் சாதிக்க முடியாதது எதுவுமல்ல என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

சம்மாந்துறை கோரக்கர் அறநெறிப் பாலர் பாடசாலைக்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வு கோரக்கர் பிள்ளையார் ஆலய நிர்வாகத் தலைவர் ம.சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றபோது, அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,எங்களது கலை கலாசாரம், பொருளாதாரம் போன்ற சகலவற்றையும் பாதுகாப்பதற்கு கல்வி மிக முக்கியமாகவும் அடிப்படையாகவும் அமைகிறது.

நாங்கள் சிறந்ததொரு கல்வியறிவை பெற்றிருப்போமானால் வேறு யாரும் எங்களை இலகுவாக ஏமாற்ற முடியாது.பொருளாதார ரீதியான பலவீனத்தை பயன்படுத்தி மதமாற்றத்தைச் செய்வதோ அற்ப சொற்ப சலுகைகள் ஊடாக மதமாற்றம் செய்வதனையும் தடுத்த நிறுத்தக்கூடிய ஒரேயோரு சக்தி கல்விக்கு மாத்திரமே இருக்கிறது.

கல்வியையும் கலை கலாசாரங்களையும் முறையாக நாம் கடைப்பிடிப்போமானால் நிச்சயமாக மதமாற்றங்களை நாம் தடுத்து நிறுத்த முடியும்.வளருகின்ற சிறார்களுக்கு கல்வியறிவை புகட்டுகின்ற பொழுது வலுப்படுத்தி வளப்படுத்துகின்ற போது தான் அச்சமூகமானது எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய சமூகமாக மாறும் என்றார்.