வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை பொலிஸ் வளாகத்தில் திங்கட்கிழமை (19.06.2017) நடைபெற்றது.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி. நஸீர் தலைமையில் நடைபெற்ற இப் பரிசோதனை நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர கலந்து கொண்டு அணிவகுப்பு, ஆயுதங்களின் பராமரிப்பு, வாகனப் பயன்பாடு, பொலிஸாரின் சேம நலன்கள்,  குறித்தும் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் அணிவகுப்பு மரியாதையினையும் ஏற்றுக் கொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர பேசுகையில், எந்த வேளையிலும் மக்களுக்காக தியாக சிந்ததையுடன் கடமையில் ஈடுபடுபவர்களாக பொலிஸ் உத்தயோகத்தர்கள் உள்ளனர் என்பது நாட்டுக்கும் மக்களுக்கும் பெருமையான விடயமாகும் என தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவதுளூ
நாட்டை காத்து நல்வழிப்படுத்துவதில் பொலிஸாரின் சேவை மிகப் பெறுமதியானது.


இரவு பகல், வெயில் மழை என்றும் பாராது பொலிஸார் எந்நேரமும் தங்களை நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.
அதேபோல நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறுவரும் வளர்ந்தவரும் முதியவரும் படித்தவரும் பாமரரும் ஆண், பெண் இன மத வேறுபாடின்றி பொலிஸாரின் சேவையில் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் தமது கடமைகளை கண்ணியமாக நிறைவேற்றத் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்' என்றார்.