சர்வதேச ஆய்வு மாநாட்டின் பூர்வாங்க வைபவம்.


(துறையூர் தாஸன்)

போரும் போருக்குப் பின்னரான காலங்களில் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப்பொருளில்,சர்வதேச ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில், நிறுவகப் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் தலைமையில் நேற்று  மாலை(15)  பூர்வாங்க நிகழ்வு இடம்பெற்றது.

நிறுவக பதிவாளர் ஏ.ஜெ.கிறிஸ்டியின் வரவேற்புரையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நடன நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ஞா.ஜெயரஞ்சனி இம்மாநாட்டுக்கான அறிமுகத்தினை அறிமுகம் செய்ய கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை முன்னாள் பீடாதிபதியும் சிரேஸ்ட விரிவுரையாளருமான என்.செல்வகுமாரனால் ஆய்வு மாநாட்டின் அடிப்படை எண்ணக்கரு உணர்த்தப்பட்டது.


அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களால் லய வாத்திய சங்கமமும் பறையிசைக்கூத்தும்,வரவேற்புப் பாடல் மற்றும் நடனமும் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டது.

அரங்காற்றுகை,கட்புல செயல் திறன் கற்கை,மானுடவியலும் சமூகவியலும் வரலாறும் கலைவரலாறும்,தொல்பொருள் ஆராய்ச்சி,உள்ளூர் அறிவுத் திறன்,கலாசார உரிமைகள்,மனித உரிமைகள்,சமூக ஒற்றுமைகள்,சுகாதாரமும் மருத்துவமும்,பால்நிலை சமத் துவம்,திரைப்படமும் ஊடக கல்வியும்,பண்பாட்டு மரபுரிமைகள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் இன்றும்(16) நாளையும்( 17 ) வாசிக்கப்படவுள்ளதுடன் நாளை மாலை பறங்கியர் மற்றும் தமிழர் கலாசார இசை கலையாற்றுகை நிகழ்வுகளும் ஆற்றப்படவுள்ளன.

புத்தகங்கள்,ஓவியங்கள்,புகைப்படங்கள் என்பன இன்றும்(16) நாளையும்(17) காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி படுவான்கரையை நோக்கிய கலை பண்பாட்டு கலைப்பயணமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.