கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் திட்டம்

(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஊடாக லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி உதவி மூலம் வாகரை கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் திட்டம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி,  லண்டன் பி.பி.சி வானொலியின் செய்தி பிரிவைச் சேர்ந்த பிரதீபன் புனிதசீலன் உட்பட பலர் கலந்து கொண்டார்.

இத்திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக பாடசாலை அதிபரிடம் பத்து மாதங்கள் பசும் பால் வழங்கும் முகமாக மூன்று இலட்சத்து எழுபத்தி மூவாயிரம் ரூபாய் நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

இதன்போது புதிதாக நியமனம் பெற்ற கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

நீண்ட கால திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன் மூலம் வறுமையின் கீழ் வாழும் பல மாணவர்களின் போசாக்கை மெருகூட்டும் முகமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.