Thursday, June 22, 2017

'மாணவ வாழ்வை பாதிப்பதில் மன அழுத்தத்தின் செல்வாக்கு' : கட்டாயம் வாசிக்கவும்

ads


21ம் நூற்றாண்டின் முக்கிய நோயாக மன அழுத்தம் காணப்படுகின்றது என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தற்போது ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக மன அழுத்த நோய்களிற்கு என்று வைத்தியர்களிடம், வழிகாட்டல் ஆலோசகர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மனஅழுத்தம் மிகவும் கொடுமையானது இயல்பான வாழ்கையை பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தமானது குறிப்பாக 5 முதல் 20 வயது கொண்டவர்களை அதிகளவு பாதிக்கின்றது.

அதாவது மாணவப்பருவத்தினரே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இவ் மன அழுத்தமானது மாணவர்களை பாதிப்பதுடன் அவர்களை சார்ந்த சமூகத்தில் உள்ளவர்களையும் பாதிக்கின்றது.

உலகில் உள்ள மக்கள் தொகையில் நூற்றிற்கு

  • 69 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்னர்.
  • 76 பேர் போதுமான உறக்கம் இல்லாமல் உள்ளனர்.
  • 77 பேர் குடும்ப உறவுகளினால் மன அழுத்தத்திற்கும் ,மனோபாயத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
  • 50 பேர் புதிய பொருள்களை நுகர முடியவில்லை அதற்கேற்ற மனநிலை காணப்படாமல் உள்ளனர்.
  • 55 பேர்களிற்கு குறைந்த நண்பர்கள் உள்ளனர்.
  • 58 பேர் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர்.
  • 7 பேர் கோபப்படுபவர்களாக உள்ளனர்.


மனிதனின் அதிகமான மனஅழுத்தம் உயிரியல் வயதை 30 வருடங்களாக கூட்டுகின்றது என்று அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. அத்துடன் ஒருவரில் மன அழுத்தம் உச்சகட்டத்தை அடையும் வேளை தற்கொலை நிகழ்வுகளிற்கும் இட்டுச்செல்ல வாய்ப்பளிக்கின்றது. கடந்த 2004-2008 காலப்பகுதிகளினுள் மட்டும் 16000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல் 2006ல் மட்டும் 5857 மாணவர்கள் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களாக அமைகின்றன.

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்?
மன அழுத்தம் இரண்டு வகையில் ஏற்படுகின்றது. ஒன்று நம்மைச்சூழ்ந்த சமூகத்தின் செயற்பாடுகளினால் நமக்குள் எற்படுவது மற்றயது நம்முடைய வாழ்கை முறை சிந்தனைகளினால் ஏற்படுவது. ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை ,அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் சில காரணிகளாகும். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் போன்ற காரணங்களாலும் மன அழுத்தம் உண்டாகிறது. அத்துடன் பிறப்பு, இறப்பு, போர்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு ,பெயர் இழத்தல் , கடன், வறுமை, தேர்வு போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல் என நம்மைச்சுற்றி நிகழும் எல்லாவிதமான காரணிகளும் மன அழுத்தத்திற்கு நம்மை கொண்டுசெல்கின்றது.

மன அழுத்தத்தை உண்டாக்கும் தவறான பழக்கவழக்கங்கள்?
புகைபிடித்தல் , போதைவஸ்துப்பாவனை , மதுபானப்பாவனை , சரியான உணவுப்பழக்கவழக்கம் இன்மை , முறையான தூக்கம் இன்மை என்பன மன அழுத்தத்தை நாமே விலை கொடுத்து வாங்கும் செயல்களாக அமைகின்றன. புகைபிடிக்கும் போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

மன அழுத்தத்தால் உண்டாகும் நோய்கள் ?
மன அழுத்தம் பல நோய்களை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மைகிரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி , ஸ்ட்ரோக் , எஸிமா உட்பட பல நோய்களை உண்டாக்குகின்றது. அத்துடன் தலைவலி , அஜீரணக்குறைபாடு , தூக்கமின்மை , தசைப்பிடிப்பு ,உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் குறைதல், ஆஸ்துமா, மூச்சுத்தினறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய் , அல்சர் , சர்க்கரை நோய் போன்றவற்றிக்கும் காரணமாக அமைகின்றது.

மன அழுத்தம் அற்ற நிலையை உருவாக்கும் செயற்பாடுகள்
சமூகத்தில் முக்கியமான நிறுவனமாக குடும்பம் விளங்குகின்றது. இந்த குடும்பமானது நாட்டிற்கு தேவையான வளமிக்க சொத்தாக அமைகின்ற மாணவர்களை வழங்குகின்றது. இவ்வாறு பெறுமதிமிக்க மாணவர்களிற்கு தற்போது மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஆய்;வுகள் குறிப்பிடுகின்றது. பெற்றோர்களிற்குள்  ஏற்படும் சண்டை , கவனிப்பின்மை, குடும்பப்பிளவு, பெற்றோர்கள் வெளிநாடு செல்லல், பெற்றோர்களின் தவறான நடவடிக்கைகள் அண்மைக்காலத்தில் அதிகம் இடம் பெறுகின்ற திருமணத்திற்கு பின்பு ஏற்படும் தகாத உறவுகள் போன்றன மாணவர்களை அதிகம் பாதிப்பதாக குறிப்பிடுகின்றது.

இதனால் மாணவர்கள் வீட்டிலே பெற்றோர்களின் பாசத்திற்கு ஏங்குகின்றனர். அவர்களுடன் கல்வி கற்பதற்கு , சுற்றுலா செல்வதற்கு, பொழுதுபோக்கினை வெளியூர்களில் செலவிடுவதற்கு  ஏங்குகின்றனர். இவ்வாறான நிலைகள் பிள்ளைகளிடத்து தூக்கமின்மை, உணவில் ஆர்வமின்மை, சோம்பல்,பிறழ்வான நடத்தைகள், முரண்பாடுகளை வெளிக்காட்டல், சமூகத்தில் பொருத்தப்பாடற்றவராக விளங்குதல் போன்ற பலவற்றை ஏற்படுத்தி விடுகின்றது.

மன அழுத்தத்தை கையாள்வதற்கு நம்முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச்சிந்தனைகள் பெரும்பாலும் மனஅழுத்தத்தை அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். அமைதியான குடும்பச்சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தை குறைக்கின்றது. குடும்பப்பிளவின் தார்ப்பரியங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் அத்தகைய நிலைகளை களைவதன் ஊடாக பிள்ளைகளின் வாழ்கையை சீர்படுத்த முடியும். மேலும் பிள்ளைகளின் சமூக சூழல் சிறப்பாக அமைய வேண்டும்.

அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக்கூடாது மாறாக அவற்றை அழிக்கும் இடமாக குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் நுழைந்ததுடன் மனம் மகிழ்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம் இவை போன்றன மன அழுத்தத்தை குறைக்கும் காரணிகளாக அமைகின்றன.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக்கற்றுக்கொண்டால் பிரச்சினைகள் பல காணாமல் போய்விடும்.நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக்கொள்ளலும் இரத்த அழுத்தத்தைக்கட்டுக்குள் வைக்கும் தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும் எனவே 'மன அழுத்தத்தை குறைக்க சிரியுங்கள் 'என்கின்றார் மனோதத்துவ நிபுனர் லீபெர்க்.

பொதுவாக பின்வரும் செயற்பாடுகள் மன அழுத்தத்தை குறைக்கும் செயற்பாடுகளாக அமைகின்றது
காலையில் எழும்புவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

வெளியில் செல்வதற்கு வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்

ஒரு காகிதத்தில் அல்லது டயரியில் அன்றைய தினம் செய்யவேண்டியதை குறித்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள் . புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும் . தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும்.

வேலைகளை தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகர்க்கும். செய்யவேணடியதை தாமதப்படுத்தாமல் செய்ய வேண்டும்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்து செய்வதை தவிருங்கள்.

வேலை செய்யாததை கட்டி அழாதீர்கள் சரி செய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

முன்கூட்டியே செல்ல வேண்டிய இடத்திற்கு புறப்பட ஆயத்தமாகுங்கள். உதாரணமாக பத்து நிமிடங்களில் புறப்பட வேண்டிய இடத்திற்கு இருபது நிமிடம் முன் கூட்டியே செல்லப்பழகுங்கள்.

மாற்று வழிகளை கையாளப்பழகுங்கள். உதாரணமாக பாடசாலை செல்வது பஸ்ஸிலாக அமையும் போது வேறு வழி மூலம் பாடசாலை செல்லலாம் என்ற நிலையை கொண்டு வரல் வேண்டும்.

இறுக்கத்தை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.சில வேலைகள் தடைப்படுவதாலோ, தாமதப்படுவதனாலேயா உலகம் முடிந்து விடப்போவதில்லை.

தவறாய்ப்போன ஒரு விடயத்தை குறித்து சிந்தித்து கொண்டிருப்பதை விட சரியாய் நிகழ்ந்த பலவற்றை நினைத்து மகிழுங்கள்.

செல்லும் இடங்கள் புதியதாக அமையுமிடத்து வழியை முதலிலேயே தெளிவாக கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

ஓய்வு எடுக்கும் வேளை தொலைபேசிகளை அணைத்துக்கொள்ளுங்கள்.

செய்வதற்கு இயலாத பணிகளை ,நேரமில்லாமல் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளை செய்ய முடியாது என்று கூறப்பழகுங்கள்.

உணவு,உடை,உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச்செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

நன்றாகத்தூங்குங்கள் முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள் தடையற்ற தூக்கத்திற்கு அது உதவும்.

வீட்டில் பொருட்களை அதன் அதன் இடங்களில் வைக்கப்பழகுங்கள். அவசரமாகக்கிடைக்காத பொருட்கள்  மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

குழப்பங்கள், கவலைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று குறை கூறுவதை விட்டு மற்றவரை புரிந்து கொள்ளப்பழகுங்கள்

உங்கள் உடை நடை பாவனைகளின் நம்பிக்கை மிளிரட்டும். உடைகள் நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் ஏற்படுத்துகின்றது.

மதுபாவனைகள்.புகைப்பழக்கங்கள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள் இவ்வாறான காரணிகளே சமூகத்தில் துஸ்பிரயோகங்கள்,சமூக சீர்குலைவுகளை ஏற்படுத்துகின்றன .ஆகவே இவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலைகள் வேலைகள் இருந்தால் அதனை முதலில் முடித்து விடுங்கள். அப்போதுதான் பிடித்த வேலைகள் மனதை இலகுவாக்கும்.

' வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும், நோய் வரும் முன் காக்க வேண்டும்' என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும்  பொருந்தும்.

மனிதனிற்கு வரும் நோய்களில் 75-90 அழுத்த நிலைகளாலே ஏற்படுவதாக அண்மித்த ஆய்வுகள் குறிப்பிடுகிறது. மனஅழுத்த மேலாண்மையை கட்டுப்படுத்த உளவியல் வல்லுணர்களின் உதவியுடன் மன அழுத்த மேலாண்மையை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

 மானிட வாழ்வில் மாணவப்பருவப்பகுதிகளில் செல்வாக்குசெலுத்தி பாதிப்பை ஏற்படுத்தும்  மன அழுத்தத்தை குறைப்பதற்கு வீட்டில், பாடசாலையில், மத வழிபாட்டிடங்களில், ஏனைய பொது நிறுவனங்களில் கற்றல்-கற்பித்தல் ஒழுக்க நெறிமுறைகள், தியானப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள், மற்றும் மேற்கூறிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வழிகாட்டல்களை முறையாக வழங்கும் போது  மாணவ வாழ்வு பாதுகாக்கப்படும் என்பதில் எதுவித ஜயமில்லை.

யேசுஐயா டிலானி
உதவி விரிவுரையாளர்,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்

'மாணவ வாழ்வை பாதிப்பதில் மன அழுத்தத்தின் செல்வாக்கு' : கட்டாயம் வாசிக்கவும் Rating: 4.5 Diposkan Oleh: - Office -
 

Top