பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் அறிவுரை

“நேரத்தை வீணடிக்காமல், வீதிகளில் போராட்டங்களில் ஈடுபடாமல், அனைத்து விரிவுரைகளுக்கு சென்று, படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்துமாறு, பல்கலைக்கழக மாணவர்களிடம், அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள பத்தி​ரிகை விளம்பரம் ஒன்றின் மூலமே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“எமது வீதிகளில், போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டு, பல்கலைக்கழக மாணவர்கள் நேரத்தை வீணடிப்பதை நாம் அடிக்கடி காண்கின்றோம். கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாகை பிரயோகங்களுக்கு உள்ளாவதையும் நாம் அவதானித்துள்ளோம். அவர்கள் முற்றாகப் புரிந்துக்கொள்ளாத ஒரு விடயம் பற்றி எழுதி, பதாதைகளை ஏந்திக்கொண்டு, வீதிகளில் போக்குவரத்து இடையூறு விளைவிப்பதன் மூலம், எவ்வளவு நேரம் வீணாகின்றது” என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்காக, பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களை அவர்களாகவே பலிகடாக்களாக மாற்றிக்கொள்வது ஏன் என்று அந்த விளம்பரத்தில் கேள்வி​யெழுப்பப்பட்டுள்ளது.

“கடுமையாக உழைக்கும் பெற்றோர், தங்களது பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டம் பெற்று, நாட்டின் சிறந்த பிரஜையாக வாழ வேண்டும் என்பதையே விரும்பிகின்றனரே தவிர, தவறான வழிகாட்டுதல்களில் செல்ல வேண்டும் என்பதை அல்ல” என்பதையும் அந்த விளம்பரம் குறிப்பிட்டுள்ளது.

“ஒவ்வொரு டொக்டரையும் உருவாக்குவதற்கு, அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவிடுகின்றது. விரிவுரைகளுக்குச் செல்லாமல், போராட்டங்களில் ஈடுபடுவதற்காக, வரி செலுத்துவோரை வீணாக்குகின்றனர், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலையில் பிரச்சினை செய்யாமல் வெற்றிக்கான பாதையை தேடுங்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.