களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் பற்றிய முழு விபரம் : கட்டுரை

 உலகெலாம்; 'ஓம்' என்ற ஓங்கார ஒலி நீக்கமற நிறைந்திருப்பதாக இந்து சமயத்தவர்கள் நம்புகின்றனர்.இந்த ஓங்கார ஒலி ஞானப் பொருளாய், நவமா மணியாய், அரனார் மகனாய், அரிதிரு மருகனாய், பரஈஸ்வரியின் பாலனாய் ஆனைமுகத்தோடும் ஐந்து கரத்தோடும் பானை வயிற்றோடும் வேழமுகத்து விநாயகனாக விளங்கி விக்கினம் தீர்த்து வினைநீக்கி அருள் புரிகின்றார்.உலகின் பல இடங்களிலும் விநாயகப் பெருமானுக்கு ஆலயங்கள் பல உள்ளன. களுதாவளைப் பதியில் அமைந்துள்ள சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் அற்புதங்களாலும் அருளாட்சியாலும் பிரசித்தி பெற்று விளங்கும் புண்ணிய தலமாகும்.

நாள்தோறும் அடியவர்கள் 'பொங்கலோ பொங்கல்' என்று பொங்கிப் படைக்கின்ற பூதகணாதிப சேவிதராகிய இந்த சுயம்புலிங்கப் பிள்ளையாரின் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா ஜூன் மாதம் 21ஆம் திகதி (புதன் கிழமை) ஆரம்பமாகி ஜூன் மாதம் 30ம் திகதி (வெள்ளிக் கிழமை) முற்பகல் 09.00 மணியளவில் ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுவதற்கு கணேசப்பெருமானின் திருவருட்கடாட்சம் கிடைத்துள்ளது. சுயம்புலிங்கப் பிள்ளையாரின் அருள் பெற்ற அடியவர்களுக்கும் அவர் அருளைப்பெற எதிர்பார்த்துக் காத்திருக்கும் அடியவர்களுக்கும் இத்திருவிழாச் செய்தி பாலொடு கலந்த தேனாக தித்திக்கும் என்பது எமது நம்பிக்கை.

1. ஆலயத்தின் ஆரம்பம் :

இந்த ஆலயத்தின் தோற்றம் பற்றிக் கர்ண பரம்பரைக் கதைகளும் ஐதிகங்களும் பல உள்ளன. எனினும் 'களுவைநகர்க் களுதேவாலயக் கல்வெட்டு' என்ற ஆவணத்தில் இந்த ஆலயம் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பல கூறப்பட்டுள்ளன. கல்வெட்டு என்று கூறப்படினும் இது கல்லில் எழுதப்படவில்லை என்பது தெளிவு. பனையோலைச் சுவடியில் இருந்த இவ்வரலாறு பின்னர் கடதாசியில் கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டுள்ளது. பலருக்குத் தெரியாமல் சிலருக்கு மட்டும் தெரிந்ததாக இக்கல்வெட்டு இரகசியமாகப் பேணப்பட்டு வந்தது.காலத்தின் தேவைகருதி கணநாதன் அருளால் அது 1994ஆம் ஆண்டு அச்சுவாகனம் ஏறியது. இந்து கலாசாரத் திணைக்களத்தினால் தொகுத்து வெளியிடப்பட்ட 'இலங்கையின் இந்து கோவில்கள்' என்ற நூலில் இக்கல்வெட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றுத்துறை  ஆய்வாளரும் யாழ் பல்கலைக் கழகத்தின் வேந்தரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் உயர்திரு சி.பத்மநாதன் ஐயா அவர்கள் இக்கல்வெட்டை பரிசீலித்துப் பார்த்து பதிப்பித்துள்ளார். 'இலங்கையின் இலக்கிய வரலாறு' என்ற நூலை எழுதிய இணுவையூர் பண்டிதர் கா.செ.நடராஜா அவர்கள் வசன நடைபோல் எழுதப்பட்டிருந்த இக்கல்வெட்டினை பாடல் அமைவுக்கு ஏற்ப சீராக்கம் செய்துள்ளார். இந்த வகையில் இக்கல்வெட்டு கனதியான வரலாற்றுத் தடையங்களைக் கொண்ட ஆவணமாகின்றது. இக்கல்வெட்டுப் பாடல்களின்படி இலங்கையின் ஆதிவாசிகளான வேடுவர்கள் வெள்ளிலைச் சடங்கு (வெற்றிலைச் சடங்கு) என்ற வழிபாடு செய்து வந்த இடத்தில் கால்நடையாக கதிர்காமம் செல்வோர் கால் இளைப்பாற தங்கிச் செல்வது வழக்கமாயிற்று.ஒரு தடவை கதிர்காம யாத்திரை செல்லவந்த கௌரிசங்கமணிந்த திரிலிங்கதாரிகள் இருவர் இவ்விடத்தில் தங்கினர்.தென்மேற்கு மூலையில் ஆவரை மரத்தடியில் நாகம்மை இருப்புக் கண்டனர்.இஷ்டலிங்க தாரிகளான அவர்கள் தமது லிங்க பூசையை முடித்துக்கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தனர்.கல்லாறு கூரையடிப் பிள்ளையார் கோவிலைச் சென்றடைந்த அவர்கள் தமது லிங்கத்தைக் காணாது திகைத்தனர். திரும்பிவந்து பார்த்த போது பூசை செய்த இடத்தில் பூவினுள் தமது சிவலிங்கம் மறைந்திருப்பதைக் கண்டனர். அதனை எடுக்க முயன்ற போது அது மண்ணுள் இருந்த சிவலிங்கம் ஒன்றினால் ஈர்க்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.அதனை வெளியே எடுப்பதற்காக சலமட்டம் தோண்டியும் நீண்டு செல்வதைக் கண்டு அதிசயித்தனர். இந்த அற்புதத்தை அறிந்த ஊரவர்கள் விரைந்து வந்து நாவற் கொத்தினால் பந்தலிட்டு வழிபடத் தொடங்கினர்.இச்செய்திகளை அறிந்த பூபால கோத்திர வன்னிமையான 'மணியாள் பூபால வன்னிமை' என்பவர் இதனை பிள்ளையாராக வழிபடுவது எல்லோர்க்கும் நன்மையளிக்கும் என்று எடுத்துக் கூறினார். அடியவர்களும் ஏற்றுக்கொண்டனர். நிலமட்டத்திருந்த சிவலிங்கத்தைப் பாதுகாக்க மேடையொன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த மேடையின் மீது அடியார்களின் தரிசனத்திற்காக ஐம்பொன்னாலான விநாயகப் பெருமானின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுயம்புலிங்கப் பிள்ளையார் என்ற பெயர் வழங்கி வருகின்றது.


கல்வெட்டிலுள்ள பின்வரும் பாடல் வரிகள் இச்செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.
சொல்லுற்ற சீர்குளக்கோட்டு மனு(ச்) சோழ
மன்னன் சொற்படி.....
கவி(ராசவ)ரோதய விற்பரனே
........... விற்பரமாம்
குருலிங்க சங்கமக் குருவொடு பண்டாரம்
இருவருமாய் கதிரைநகர் நடந்தவாறே
செல்லும் வழிதனிலே அன்று நாழிகை ஒன்பதிலே
களுவை நகர் களுதேவ ஆலயமாம்
வெள்ளிலைச் சடங்கு செய்யுமிடம் இதுதானென்று கண்டு
இன்றிதில் நாம் கடமையைக் கருதி அங்கு தங்கினரே
தங்கியபின் நாகம்மை தென் மேற்கில்
ஆவரை மரத்தண்டையில் இருப்புக் கண்டார்
....குளத்தில் இறங்கிப் பின் தோய்ந்து, உலர்ந்து
சிவலிங்க பூசை செய்வதென தெட்சைக்கட்டுத் திறக்கலானார்
......கலியுகம் பிறந்து
இரண்டு எட்டு ஐந்து ஆண்டு
சென்று இடப மாதமதில் இரண்டாம் திகதிதனில்
ஆலயமாய் முகூர்த்தமிட்டு வணங்கலானார்
.......இஷ்ட லிங்கம் பூமிமேல் சலம்பொறுக்கப் போனவாறு விளக்கலுற்றார்
..... எல்லை நாள் இவர் வந்த காலம் கேளீர்
தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம்
பத்தொன்பதாம் திகதி புதன் கிழமை பின் வளர
அச்சாதியாரும் வரு வரவு காணே
மணியாள் பூபால வன்னிமைதான் பார்க்கும் போது
இஷ்டலிங்கம் என வணங்கி இலங்கை
தன்னிடத்தில் ஈசனிட ஆலயங்கள் உண்டு பாரும்
மூலசத்தி விநாயகர் ஆலயந்தான்
பிள்ளையார் கோவிலிது அதுவாக
சிவபிரானைப் பணியும் என்றும் இயம்பினார்
வன்னிமையும் இயம்பினாரே

இன்றும் கதிர்காமம் செல்லும் அடியவர்கள் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரை வணங்கி அவரது அருளாசி பெற்று யாத்திரையைத் தொடர்கின்றனர்.


2. ஆலயத்தின் அமைவிடம் : 

மட்டக்களப்பு மாநகருக்குத் தெற்கே களுவாஞ்சிகுடி, கல்முனை, திருக்கோவில், அம்பாறை முதலிய இடங்களுக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 24 கிலோ மீற்றர் தூரத்திலும் கல்முனையிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலும் வெற்றிலைச் செய்கைக்குப் புகழ்பெற்ற பழம்பெரும் கிராமமான 'களுதாவளை' அமைந்துள்ளது.கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கே மீனிசை பாடும் மட்டக்களப்பு வாவியையும் தெற்கே களுவாஞ்சிகுடி கிராமத்தையும் வடக்கே தேற்றாத்தீவு, குடியிருப்பு ஆகிய கிராமங்களையும் எல்லைகளாகக் கொண்டது.ஏழு பாடசாலைகள், பல கிராம சேவகர் பிரிவுகள், பல ஆலயங்கள் என்பவற்றை தன்னகத்தே கொண்ட இக்கிராமம் நெய்தலும் மருதமும் ஒன்றிணைந்த நிலப்பாங்கினைக்  கொண்டது. கடின உழைப்பாளிகளும் கல்வி மேம்பாடுடைய மக்களும் இந்துமத கோட்பாடுகளைக் கைக்கொண்டு மரபு, சம்பிரதாயம் என்பவற்றுக்கு  மதிப்பளித்து தமிழரின் பாரம்பரிய கலை, கலாசாரங்களை பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். பிரதான வீதியில் களுதாவளை மகா வித்தியாலயம், பொது நூலகம், கலாசார மண்டபம், வேப்பையடி (கல்லடி) பிள்ளையார் ஆலயம் , பாலர் பாடசாலை என்பன அமைந்துள்ள இடத்திலிருந்து மேற்கு நோக்கி பன்குளம், பெரிய குளம் என்பவற்றை ஊடறுத்துப் பாதையொன்று செல்கின்றது.பாதையின் இருபுறமும் வரிசையாக நடப்பட்ட மருத மரங்களின் நிழல். பாதையின் இடையே தாழையடி நாகதம்பிரான் ஆலயம்.குளத்து நீரில் பட்டு மலர்ந்த தாமரை மலர்களில் தொட்டுவரும் இளந்தென்றல் இதமூட்ட சுமார் 750 மீற்றர் தூரத்தில் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் ஏகாந்தமான இடத்தில் அமைந்திருக்கின்றது. ஆலயத்தின் வடக்கு, மேற்கு,  தெற்கு மருதநில நெற்காணிகள். கிழக்கே தீர்த்தக் கேணியோடு அமைந்த பன்குளம்.குடிமனைகளற்ற பேரிரைச்சலும் சத்தமுமற்ற மரநிழலால் சூழப்பட்ட இடத்தில் ஏகதந்த நாயகனாம் சுயம்புலிங்கப் பிள்ளையார் வீற்றிருந்து அருள் மழை பொழிகின்றார்.

3. ஆலயத்தின் அமைப்பு :

இந்த ஆலயம் மடாலய அமைப்புடையது.கருவறை எனப்படும் மூலஸ்தானத்தின் மீது விமானம் எனப்படும் தூபியில்லை.கொடியேற்றுவதற்கான கொடி மரம் இல்லை. ஆலய நுழைவாசலில்  இராசகோபுரம் இல்லை.எனினும் அடியார் கூட்டத்திற்கும் ஆனைமுகனின் அருளுக்கும் குறைவேயில்லை.தற்போதுள்ள நிலையில் மூலவராக சுயம்புலிங்கப் பிள்ளையார் வீற்றிருக்கின்றார்.மூலஸ்தானத்தைச் சூழ சுற்றுப் பிரகாரத்தில் கல்லினாலான சோடச(16) விநாயக முகூர்த்தங்கள் சிலா விக்கிரகங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. உட்புற மதிற்சுவரில் மாடக்கோவில்களில் 63 நாயன்மார் சிலைகள் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன. உள்வீதியில் நாகதம்பிரான், வைரவர், நவக்கிரகம், முருகன் கோவில்கள் பரிவாரக் கோவில்களாக உள்ளன.அத்தோடு தீர்த்தக்கிணறும் மடப்பள்ளியும் வசந்த மண்டபமும், மணித்தூணும், யாகசாலையும், வாகனசாலையும், களஞ்சியசாலையும் அமைந்துள்ளன. வெளிப்புறத்தில் காரியாலயம், குருகுலமடம், 06 குடிநீர்க் கிணறுகள், தீர்த்தக்கேணி, இளைப்பாறு மண்டபம் என்பவற்றோடு சற்று தூரத்தில் முடி மளிக்குமிடமும் கழிப்பறை வசதிகளும் அமைந்துள்ளன.


4. நிருவாகக் கட்டமைப்பு :

பண்டு பரவணியாக பல்லாண்டு காலம் பேணப்பட்டு வந்த பாரம்பரிய மரபுப்படி ஆறு குடும்பங்களின் தலைவர்களான ஆறு வண்ணக்குமாரும் திறப்புக்காரர் ஒருவரும் நிருவாகத்தை நடாத்தி வந்தனர்.1994ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி நடைமுறைக்கு வந்த யாப்பு உபவிதிகளின் படி 19 பேர் கொண்ட ஆலய பரிபாலன சபையினர் நிருவாகத்தை நடாத்தி வருகின்றனர்.இவர்கள் ஞாயிற்றுக் கிழமைதோறும் ஒன்று கூடுவதோடு மாதந்தோறும் வரவுசெலவு நிலைமைகளையும் பரிசீலிக்கின்றனர்.வருடாந்தப் பொதுக் கூட்டம், திருவிழாப் பொதுக் கூட்டம், விசேட பொதுக் கூட்டம், அவசர பொதுக் கூட்டம் என்பனவும் தேவையேற்படும் போது கூட்டப்படும். பல்வேறு வகையான வழிகள் மூலம் கிடைக்கின்ற பணம் வங்கியில் வைப்பில் இடப்பட்டு காசோலை மூலம் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஊரில் உள்ள ஏனைய இந்து ஆலயங்களின் காப்பாளராகவும் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய நிருவாகத்தினர் செயற்படுகின்றனர்.தாந்தாமலை முருகன் ஆலயம், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் என்பவற்றின் நிருவாகத்தோடும் பிள்ளையார் ஆலயத்தினர் தொடர்புபட்டுள்ளனர்.ஊரில் நடைபெறுகின்ற முக்கிய நிகழ்வுகளுக்கு வண்ணக்குமாருக்கும் கடுக்கண்டவர் எனப்படும் ஊர்ப்போடிமாருக்கும் அறிவிக்கின்ற மரபு இன்றும் பேணப்படுகின்றது.

5. பணியாளர்கள் :

தற்போதைய நிலையில் ஆலய பிரதமகுரு, உதவிக்குரு, அமுதுபடி வைக்கும் பாகசாலை ஐயர், காவற்காரர்களாகவும் ஆலய உள்வேலைகள் செய்வோராகவும் இருவர், களஞ்சியப் பொறுப்பாளர், பணம் அறவிடும் எழுதுவினைஞர், விறகு விற்பனையாளர், ஒலி ஒளி அமைப்பாளர், சலவைத் தொழிலாளி என்போர் ஆலயத்தில் பணிபுரிகின்றனர்.முக்கியமான வேளைகளில் மேலும் சிலரும் சேவையில் ஈடுபடுகின்றனர்.நேர்த்திக்கடனாக முடி மழிப்போருக்குச் சேவை செய்ய சிகை அரங்காரத் தொழிலாளியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தின் நிருவாகத்திற்குட்பட்ட கலாசார மண்டபத்தை பாதுகாத்துப் பராமரிக்கும் பணியிலும் இருவர் சேவையாற்றுகின்றனர்.

6. பூசைகள் :

ஆரம்ப காலத்தில் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் மதிய நேரப் பூசை நடைபெற்று வந்தது. காலக்கிரமத்தில் நாள்தோறும் மதிய பூசை நடைபெறலாயிற்று.இப்பொழுது வெள்ளிக் கிழமைகளில்; காலை 06.00மணி, மாலை 06.00மணி, மதிய பூசை என மூன்றுவேளைப் பூசைகள் நடைபெறுகின்றன.ஏனைய நாள்களில் மதிய பூசை மட்டும் நடைபெறுகின்றது.இந்த ஆலயத்தின் நிருவாகத்தில் பங்காளிகளாக உள்ள ஆறு குடும்பத்தினருக்கும் பின்வரும் விசேட பூசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.




பெத்தாக்கிழவி குடும்பம் - சித்திரைப் புத்தாண்டுப் பூசை
பேனாச்சி குடும்பம் - மகா சிவராத்திரிப் பூசை
சுரக்காமூர்த்தி குடும்பம் - திருவெம்பாவைப் பூசை
போற்றிநாச்சி குடும்பம் - கார்த்திகைப் பூசை
செட்டி குடும்பம் - தைப்பிறப்புப் பூசை
வள்ளிநாயகி குடும்பம் - ஆவணிச் சதுர்த்திப் பூசை

7. விரதங்கள் :

பல விரதங்கள் அனுட்டிக்கப்பட்டாலும் முக்கியமான விரதங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

விநாயகர் சஷ்டி விரதம் :

மிகப்பழங் காலந்தொட்டு இவ்விரதம் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 'காப்புக்கட்டு விரதம்' எனவும்; இதனை அழைப்பர்.அநேகமாக இவ்விரதம் 21 நாள்களைக் கொண்டதாக அமையும்.விரதத்தின் போது நாள்தோறும் பிள்ளையார் கதையேடு படிக்கப்பட்டு பத்திர புஷ்பம் போடப்படுகின்றது.ஏடு படிப்பவருக்கு அருகிலிருக்கும் ஒருவர் பாடலுக்கு ஏற்ப பொருத்தமான சந்தர்ப்பத்தில் 'நல்லதாம்' என்ற வார்த்தையினை அளபெடை முறையில் நீட்டி இழுத்து ஒலிப்பார்.விரதமுடிவில் காப்பறுத்து தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடி திருப்பொன்னூஞ்சல் பாடி மகிழ்வர். 1500க்கு மேற்பட்ட அடியவர்கள் விரதம் அனுட்டிக்கின்றனர்.
கேதார கௌரி விரதம் :

இந்த விரதமும் அநேகமாக 21 நாள்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இவ்விரத காலத்தில் நாள்தோறும் கேதார கௌரி ஏடு படிக்கப்பட்டு பத்திர புஷ்பம் போடப்படுகின்றது.விரதத்தின் இறுதி நாளன்று கௌரிக் காப்பு வழங்கப்படுகின்றது.இவ்விரதத்திலும் 1500க்கும் மேற்பட்ட விரதாதிகள் பங்கு பற்றுகின்றனர்.

8. ஆலயத்தின் விசேட நிகழ்வுகள் :

திட்டமிட்டு தீர்மானிக்கப்பட்ட பின்வரும் நிகழ்வுகள் வருடந்தோறும் உரிய தினங்களில் நடைபெற்று வருகின்றன.

சித்திரைப் புதுவருடப் பிறப்பு (1008 சங்காபிஷேக பூசை)
திருநாவுக்கரசு  நாயனார் குருபூசை தினம்
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை
கும்பாபிஷேக நினைவு தினம் (1008 சங்காபிஷேக பூசை)
வருடாந்த அலங்கார உற்சவமும் தீர்த்தமும் (ஆனி உத்தரம்)
மாணிக்கவாசக சுவாமிகள் குருபூசை தினம்
வைரவர் பூசை
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை தினம்
வரலட்சுமி விரதம்
ஆவணிச் சதுர்த்தி விரதம்
புரட்டாதி சனீஸ்வர ஹோமம்
கேதார கொளரி விரதம்
கார்த்திகை விளக்கீட்டுப் பூசை
விநாயகர் சஷ்டி விரதமும் தீர்த்தமும்
திருவெம்பாவையும் திருவாதிரைத் தீர்த்தமும்
தைப் பொங்கல் பூசை
மஹா சிவராத்திரி விரதப் பூசை
கல்லடிப் பிள்ளையார் ஆலய பங்குனி உத்தர வருடாந்த அபிஷேக பூசை.
12 வருடங்களுக்கு ஒரு முறைவரும் மகா மாசி மகத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும்


9. தீர்த்தோற்சவங்கள் :

ஆனி உத்தரத் தீர்த்தமும் காப்பறுப்புத் தீர்த்தமும் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக் கேணியில் இடம்பெறும்.திருவாதிரைத் தீர்த்தமும் மகா மாசிமகத் தீர்த்தமும் வங்காள விரிகுடாக் கடலில் சமுத்திர தீர்த்தமாக நடைபெறுகின்றது.இதன்போது சுவாமிகள் கிராமப் பிரதட்சணமாக ஊர்வலம் வருவதும் மஞ்சள் நீரூற்றி மகிழ்தலும் மரபாகும்.

10. திருவிழா :

ஆனி உத்தர நட்சத்திரத்தை தீர்த்தோற்சவ தினமாகக் கொண்டு திருவிழா ஆரம்பிக்கப்படும்.கதிர்காமக் கந்தனின் தீர்த்தமாட வந்த கால்நடை யாத்திரிகர்கள் கதிர்காமம் செல்லமுடியாத சூழ்நிலையில் இந்த ஆலயத்தில் குவியத் தொடங்கினர். அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் திருவிழாவும் தீர்த்தமும் நடந்தேறின.திருவிழா, தீர்த்தம் என்பவற்றில் பல மாற்றங்கள் இடம்பெற்றன. இப்பொழுது ஆனி உத்தரத்தில் தீர்த்தம். ஒன்பது நாள்கள் திருவிழா. பத்தாம் நாள் தீர்த்தம் என்ற அமைப்பு நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.முதல் இரண்டு திருவிழாக்களும் கோவில் உபயத்தில் நடைபெறும். மூன்றாம் நாள் தொடக்கம் எட்டாம் நாள் வரையான திருவிழாக்கள் பின்வரும் வரிசைக் கிரமத்தில் நடைபெறுகின்றன.வள்ளிநாயகி குடும்பம், செட்டி குடும்பம், போற்றிநாச்சி குடும்பம்,
சுரக்காமூர்த்தி குடும்பம், பேனாச்சி குடும்பம், பெத்தாக்கிழவி குடும்பம். ஒன்பதாம் நாள் திருவிழாவும் தீர்த்தோற்சவமும் மேற்குறிப்பிட்ட குடும்பங்களின் உபயத்தில் பொதுவாக நடைபெறும்.கூட்டுப் பிரார்த்தனை சமய சம்பந்தமான சொற்பொழிவுகள், கலை நிகழ்வுகள், நாதஷ்வர மேளக் கச்சேரி என்பவற்றுக்கு மேலதிகமாக தத்தமது குடும்பத் திருவிழாவை சிறப்பிப்பதற்கும் அடியார்களின் வருகையை அதிகரிப்பதற்குமாக ஒவ்வொரு குடும்பத்தினரும் சிறப்பான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்வது வழக்கம்.பட்டு, பரிவட்டம், பூசைத் திரவியம், அபிஷேகப் பொருள்கள் எடுத்து வருதல் என்ற நிகழ்வுகளும் பாற்குடப் பவனியும், கலை நிகழ்வுகளின் ஊர்வலங்களும் கோலாகலமான முறையில் நடைபெறும்.திருநீற்றுக்கேணி சிவசத்தி ஸ்ரீ முருகன் ஆலயம், கொம்புச்சந்தி அம்மன் ஆலயம் என்பவற்றிலிருந்து இவை ஆரம்பமாகின்றன. தீர்த்தமாடிய உடனேயே திருப்பொன்னூஞ்சலும் நடைபெறுவது இங்குள்ள மரபாகும்.

11. மாம்பழத் திருவிழா :

'மாதா பிதாவே பிள்ளைகளுக்கு உலகம்'  என்ற ஊரும் உலகமும் அறிந்த உண்மையை விளக்குவதே 'மாம்பழக்கதை'. ஒன்பதாம் நாள் திருவிழாவன்று பார்வதி பரமேஸ்வரனும் விநாயகப் பெருமானும் வள்ளி தெய்வயானை சமேதரராக வேலவனும் வெளிவீதி உலாவந்து மூலஸ்தானத்துக்கு எதிரே வந்ததும் திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர் அழகிய அற்புதமான ஞானப்பழத்தை கையிலே எடுத்துக்கொண்டு கலகம் மூட்டுவதையே கருத்தாகக் கொண்டு கோவிலுள் இருந்து வருகின்றார். 'நாரதன் நானிங்கு வாறேனையா, இங்கு நாடிய காரணம் சொல்வேனையா, ஓடிச் சென்றேனையா கைலாயம் அங்கு தேடினேன் உம்மையும் காணவில்லை' என்ற பாடலுடன் நாடகத்தைத் தொடங்குகிறார்.வேழ முகத்தவனும் வேல்முருகனும் பழத்தைக் கேட்கின்றார்கள்.ஆளுக்குப் பாதியாகக் கொடுப்பதற்கு பார்வதி முயற்சி செய்கின்றார். 'ஆளுக்குப் பாதியாக  ஞானத்தை பங்கிடல் நீதியில்லை' என்கிறார் நாரதர்.திறமையானவர்களுக்கே மாங்கனி பரிசு.போட்டி ஒன்றின் மூலமே திறமையானவர்களைத் தெரிவு செய்ய முடியுமென்று நாரதர் கூறுகின்றார். உலகங்கள் அனைத்தையும் சுற்றிக்கொண்டு முதலில் வருகின்றவரே வெற்றி வீரர்.அவருக்கே ஞானப்பழம் பரிசு என்று தீர்மானமாகிறது. 'நீலமயில் மீதிலேறி விரைந்து சென்றிடுவேன், ஞாலமெல்லாம் ஒரு நொடியில் சுற்றி வந்திடுவேன்' என்று பாடிக்கொண்டு தன் பச்சைமா மயிலில் ஏறிப் பறந்து செல்கின்றான் முருகன்.இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பிள்ளையார் ' முருகன் மயிலிலே பறந்து போகின்றான். எனது எலி எப்படிப் பறப்பது?' என்று சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்.இறுதியில் 'அன்னை பிதா உலகம் என்ற உண்மையை உணர வைக்க அப்பன் அம்மையைச் சுற்றி வந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்டார். 'விநாயகா இது என்ன விளையாட்டு?' என்று கேட்டார் உமாதேவி. 'பிள்ளைகளுக்கு மாதா பிதாவே உலகம் என்கின்ற உண்மையை உணர்த்துகின்ற விளையாட்டு இது.இதிலே விநாயகன் வெற்றி பெற்றுவிட்டான்' என்றார் சிவபெருமான்.காற்றினும் கடும் வேகமாக மனோ வேகத்திலும் கடும் வேகமாக பறந்து வந்த முருகன் பழத்தைக் கேட்டான். நடந்ததை அறிந்து கோபங் கொண்டான். 'மூத்த பிள்ளைக்கே முன்னுரிமை.இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று காட்டிவிட்டீர்கள்.எளியவனாகப் பிறந்தாலும் இளையவனாகப் பிறக்கக் கூடாது.மூத்த பிள்ளையோடு சந்தோசமாக இருங்கள். நான் வருகிறேன்' என்று கூறிக் கோபித்து கொண்டு முருகன் போகின்றான். 'முருகா! போகாதே நில்' என்று உமாதேவி தடுத்தார்.முருகன் கேட்கவில்லை. 'பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழிக்கு உவமை காட்டிவிட்டுப் போகிறான் நம்பிள்ளை.கோபம் ஆறியதும் உண்மையை உணர்ந்து திரும்பி வருவான்'; என்றார் சிவபெருமான்.கோபம் ஆறிய முருகன் திரும்பி வந்தான்.திரும்பி வருகின்ற முருகனைக் கண்ட பிள்ளையார் முருகா, முத்துக் குமரா, கந்தா, கடம்பா, கதிர்வேலா, சிவகுருநாதா, ஞானபண்டிதா, ஞானப்பழமான நீ கோபப் படலாமா என்று கேட்டு கட்டியணைத்துக் கொண்டார்.பிரிந்தவர்கள் கூடிய மகிழ்ச்சியிலே அவர்கள் பாடுகின்றார்கள்.இலகு நடையில் அமைந்த கருத்தாழம் மிக்க பாடல்களும் இராக தாள பாவத்தோடும் பத்தி பூர்வமான உணர்வோடும் நடைபெறும் போது ஆலய வளாகம் முழுமையும் அமைதியோடு இருக்கும். ஒருமணிநேரம் நடைபெறும் இந்த மாம்பழத் திருவிழாவை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பத்தி சிரத்தையோடு குழுமியிருப்பர்.இதனை களுதாவளை பஜனாவளி இசை மன்றத்தினர் பல வருட காலமாக தொடர்ந்து நடாத்தி வருகின்றனர்.

12. திருப்பொன்னூஞ்சல் :

பல ஆலயங்களிலே தீர்த்தோற்சவத்துக்கு மறு நாள் நடைபெறும் பூங்காவனத் திருவிழாவிலே பொன்னூஞ்சல் நடைபெறுகின்றது.ஆனால் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் தீர்த்தமாடி வந்தவுடனேயே திருப்பொன்னூஞ்சல் நடைபெறுகின்றது. கருவறைக்கு நேரே பொன்னூஞ்சல் போடப்படுகின்றது. சுயம்புலிங்கப் பிள்ளையார் நடு நாயகமாக வீற்றிருப்பார். அவருக்கு வலப் புறத்தில் பார்வதி பரமேஸ்வரன் வீற்றிருப்பார்கள்.இடது புறத்தில் வள்ளி தெய்வயானை சமேதரராக முருகப் பெருமான் வீற்றிருப்பார்.இருபுறமும் கவரி வீச மலர்மாரி பொழிய பொன்னூஞ்சல் பாடல்கள் பத்திரசம் ததும்பப் பாடப்படும் போது அடியவர் நெஞ்சம் நெக்கு நெக்காக உருகும்.ஆனந்தக் கண்ணீர் பெருகும்.அரோகரா சத்தம் வானைப் பிளக்கும்.மாணிக்கவாசக சுவாமிகளின் சிவனுக்குரிய ஒன்பது பொன்னூஞ்சற் பாடல்களும் இக்கிராமத்தவர்களால் இயற்றப்பட்ட சுயம்புலிங்கப் பிள்ளையாருக்குரிய ஒன்பது பாடல்களும் முருகப் பெருமானுக்குரிய ஒன்பது பாடல்களுமாக 27 பாடல்கள் பாடப்படும் போது அடியார்கள் மெய்மறந்திருப்பது சுயம்புலிங்கப் பிள்ளையாரின் அருட்கடாட்சத்துக்கு சான்றாதாரமாக அமைந்திருக்கின்றது.

13. வாகனங்கள் :

மூலமூர்த்தி சுயம்புலிங்கப் பிள்ளையாராக அமைந்திருப்பதனாலும் வெற்றிலைச் சடங்கு செய்த வேடுவர்களின் தெய்வமான முருகன் அமைந்திருப்பதனாலும் திருவிழா வீதிவலம் வரும்போது விநாயகப் பெருமான், பார்வதி பரமேஸ்வரன், வள்ளி தெய்வயானை சமேதர முருகப் பெருமான் ஆகியோர் முறையே மூஷிகம், இடபம், மயில் வாகனங்களில் அமர்ந்து வீதியுலாவருவர்.சில நாள்களில் விநாயகப் பெருமான் இரட்டைக் குதிரை, யானை வாகனங்களிலும் பார்வதி பரமேஸ்வரன் காமதேனு வாகனத்திலும் வீதியுலா வருவதுண்டு.இவற்றுக்கான வாகனங்கள் ஆலயத்தில் உண்டு.முத்துச் சப்பரத்திலும் திருவீதியுலா நடைபெறுவதுண்டு.


14. அற்புதங்கள் :

சுயம்புலிங்கப் பிள்ளையாரின் அற்புதங்கள் அநேகம்.அதனால் அவருக்கு அடியார் கூட்டமும் அநேகம்.மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாருடைய தீர்த்தமாடி அமிர்தகழிச் சேற்றை அள்ளிப் பூசினால் தீராத சொறி, சிரங்கு நோய்கள் தீர்ந்துவிடுவது யதார்த்தபூர்வமான உண்மை.களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையாரின் பெயரைச் உருக்கமாகச் சொல்லி நேர்த்தி வைத்தால் வாய்திறந்து பேசாத பிள்ளைகள் பேசுவது ஊரும் உலகமும் அறிந்த உண்மை. விநாயகர் சஷ்டி விரதத்திலே ஆவாகனம் செய்து கும்பத்தில் வைக்கப்பட்ட தேங்காயை முழுமையாக உண்பவர்களுக்கும் மாம்பழத் திருவிழாவின் போது பிள்ளையாருக்கு நிவேதிக்கப்பட்;ட மாம்பழத்தை உண்பவர்களுக்கும் மகப்பேறு கிடைத்து வருவது ஆனைமுகனின் அற்புதமேயாகும். பலிபீடத்தில் நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்போர் தீராத நோய் பிணிகளிலிருந்து சுகம் பெறுகின்றனர். விரதம் அனுட்டிப்போர் நேர்த்திகள் வைப்போர் தமது எண்ணம் ஈடேறியதும் நேர்கடனை பூர்த்தி செய்யவரும்போது சுயம்புலிங்கப் பிள்ளையாரின் அற்புதங்களை அறிந்துகொள்ள முடிகின்றது.கல்வி, தொழில் முன்னேற்றம், பரீட்சையில் சித்தி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப் பயணம், பதவி உயர்வு, திருமண நிகழ்வு என்பனவாய எத்தனையோ விடயங்களில் பிள்ளையார் அற்புதம் நிகழ்த்துகின்றார்.கர்ப்பூரம், தேங்காய், பொங்கல், மோதகம், அபிஷேகம், பூசை வேலாயுதம், காவடி, கர்ப்பூரத் தீச்சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சணை, தென்னம் பிள்ளை, மாடு, ஆடு, கோழி, குடை, விளக்கு, வெள்ளி தங்கம் முதலியவற்றாலான அடையாளப் பொருள்கள், பண நன்கொடைகள் என்பனவாய நேர்கடன்களோடு அருச்சனை, நூல் கட்டுதல், பிள்ளைவிற்று வாங்குதல், முடி மழித்தல், காது குத்துதல், திருவமுதூட்டல், அன்னதானம் கொடுத்தல், புதிதாக வாகனம் வாங்கியோர் சுயம்புலிங்கப் பிள்ளையாரிடம் அதன் திறப்பினைக் கொடுத்து அவரது ஆசி பெறுவதும்; நாள்தோறும் நடைபெறுகின்றன. திருமண சுபநாள்களில் 4-5 திருமணங்கள் ஒரே நாளில் நடைபெறுவதும் உண்டு.உருத்திராபிஷேகம், ஸ்நபினாபிஷேகம், 108 சங்காபிஷேகம், 1008 சங்காபிஷேகம் என்பன அடிக்கடி நடைபெறுவது விநாயகப்பெருமானின் அற்புதங்களுக்கு அடையாளமாகும். பிரதான பாதையோரத்தில் அமைந்திருக்கும் வேப்பையடி (கல்லடி) பிள்ளையார் சுயம்புலிங்கப் பிள்ளையாரின் பிரதிநிதியாக வீற்றிருந்து விக்கினம் நீக்கி அருள் பொழிகின்றார்.சுயம்புலிங்கப் பிள்ளையாரின் அற்புதங்களையும் பெருமைகளையும் வரலாற்றினையும் அமைவிடம், பூசை, திருவழாக்கள் என்பவற்றையும் வெளிப்படுத்துகின்ற நூல்களாக மட்டக்களப்பு சைவக் கோவில்கள், இலங்கையின் இந்துக் கோவில்கள், கணநாதபதி, ஆண்டு 09,10 வகுப்புகளுக்கான சைவநெறிப் பாட நூல்களும் இறுவட்டுப் பாடல்களும் சுயம்பு லிங்கப் பிள்ளையாருக்குக் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.இரகுநாத ஐயரின் வாக்கிய பஞ்சாங்கத்தில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் ஆலயத்தில் நடைபெறும் விசேட நிகழ்வுகளை பிரத்தியேகமான பகுதியில் வெளியிட்டிருப்பதைக் காணலாம்.மிகுந்த வரட்சியான காலத்தில் பிள்ளையாரின் ஆலய முன்றிலில் உள்ள தேங்காய் உடைக்கின்ற கல்லினை நேர்த்தி வைத்து நீருள் அமிழ்த்தி வைத்தால் மழைபெய்வது வழக்கம்.


15. காவடிகள் :

ஆண்கள் பாற்காவடி, முள்ளுக்காவடி, பறவைக் காவடி என்பவற்றை எடுக்கின்றனர்.பெண்கள் வாயலகு குத்தி வேலாயுதம் எடுக்கின்றனர்.கொம்புச்சந்தி அம்மன் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நேர்கடன் நிறைவேற்றுவோர் வரும்போது மெய் சிலிர்த்து நிற்கும்.


16. சாம்பல் எறிதல், தீர்த்தமெடுத்தல் :

ஆலயச் சூழலில் நெற்காணிகள் அமைந்துள்ளன.பிள்ளையாருக்கும் காணிகள் உள்ளன. இக்காணிகளில் நெற்பயிருக்கு பூச்சி புழு, பீடை நோய்கள் ஏற்படும் போது இரசாயன மருந்துகள் பயன்பாட்டுக்கு வராத பழைய காலத்தில் பிள்ளையாரின் மடப்பள்ளிச் சாம்பலையெடுத்து பயிருக்கு எறிவது வழக்கம். கூடுதலான தாக்கம் ஏற்படுகின்ற போது பிள்ளையாரின் அபிஷேகத் தீர்த்தமெடுத்து தெளித்து வந்தனர். இறை நம்பிக்கையோடு செய்த இச்செயற்பாடு விவசாயிகளின் பயிரைக் காப்பாற்றியது.இதற்காக விவசாயிகள் பிள்ளையாருக்கு காணிக்கையாக நெல் வழங்கி வந்தனர்.சாம்ல் எறிதல், தீர்த்தம் எடுத்தல் என்பன கைவிடப்பட்ட நிலையில் இன்றும் விவசாயிகள் பிள்ளையாருக்கு காணிக்கையாக நெல்லைக் கொடுத்து  வருகின்றனர். 'வட்டை அமுது' என்ற ஒரு நிகழ்வு பழங்காலத்தில் இங்கே நடைமுறையில் இருந்தது. சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது உண்ட கதையை அடிப்படையாகக் கொண்டு இது நடைபெற்று வந்தது. விவசாயிகள் தத்தமது காணியின் அளவுக்கேற்ப அரிசி, பணம் என்பவற்றோடு தேங்காயெண்ணெய், பால், தயிர், காய்கறி முதலானவற்றையெல்லாம் சேகரித்து கோவிலடியில் மாபெரும் அன்னதானத்திற்கு ஒழுங்கு செய்வர்.ஆலயத்தின் பூசகரான குருக்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள மூணுகட்டு வம்மியடியில் வெள்ளை விரித்து வீற்றிருப்பார். விவசாயிகள், அடியவர்கள், ஊரவர்கள் பெருந்திரளாகச் சென்று முத்துக் குடை நிழற்ற மேளதாள வாத்தியங்களோடு குருக்கள் அவர்களை கோவிலடிக்கு அழைத்து வந்து பாதபூசைகள் செய்து பணிந்து நிற்பர்.பின்னர் பூசைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும்.திருவிழா ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வட்டையமுது கைவிடப்படலாயிற்று.

17. அன்னதானம் :

அடியவர்களுக்கு அன்னதானமிட்டு ஆனந்தம் கொள்வது எம்மரபு.கோதானம்,
பூ(மி)தானம், வஸ்திர தானம், கன்னிகாதானம், இரத்ததானம், அன்னதானம் என்று பல வகையான தானங்கள் உள்ளன.ஏனைய தானங்களைவிட அன்னதானம் மேலோங்கி நிற்கின்றது.உதாரணமாக கோதானம் செய்யும் ஒருவர் ஒரு பசுவைக் கொடுத்தால் பசுவும் கன்றுமாக தந்திருக்கக் கூடாதா என்று நினைப்பார்கள். பட்டியோடு தரக் கூடாதா என்றும் எண்ணுவார்கள். 'போதும்' என்று வாய் சொன்னாலும் உள்ளம் அப்படிச் சொல்வதில்லை.ஆனால் அன்னதானத்தில் மட்டும் வயிராற உண்டதும் 'போதும் போதும், பூரண திருப்தி, வயிற்றுள் இனி இடமில்லை' என்று உண்மையைச் சொல்வார்கள்.களுதாவளை இந்து இளைஞர் மன்றம், பொதுமக்கள், ஆலய பரிபாலன சபையினரின் பூரண ஆதரவோடு திருவிழாக் காலத்தில் மாபெரும் அன்னதானத்தினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

18. ஒழுங்கமைப்புகள் :

இவ்வருடத்திற்கான திருவிழா பூசைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் அவர்களும், உதவிக் குரு சிவஸ்ரீ பு.கு.சடாட்சர சர்மா அவர்களும் நிறைவேற்ற உள்ளனர்.ஆனி உத்தரத் திருவிழா என்றதும் களுதாவளை மக்கள் மனதில் பத்தியோடு கூடிய புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடும்.வீடுகள் வீதிகள் அனைத்தும் சுத்தமாகிப் புனிதமாக்கப்படும்.வீதிகளில் வர்ணக் கொடிகளும் குருத்தோலை வாழைகளும் அலங்கார மின்குமிழ்களும் சோடிக்கப்படும்.ஆலய வீதியில் நந்திக் கொடிகள் அசைந்தாடும்.ஆலய வளாகம் தேவலோகமாக அலங்கரிக்கப்படும்.இரவில் அதன் கண்கவர் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.திருவிழாக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருத்தல், போக்குவரத்து வசதி, வாகனப் பாதுகாப்பு, குடிநீர் கழிப்பறை வசதிகள், கடை வீதி ஒழுங்கமைப்பு,ஊடக விளம்பரம், நேர்கடன் நிறைவேற்றுவோருக்கான வசதிகள், பூசை திருவிழா ஒழுங்கமைப்பு, கூட்டுப்பிரார்த்தனை கலை நிகழ்வுகள் என்பவற்றுக்கான ஒழுங்குகளைச் செய்வதற்குப் பல குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதீத அக்கறை காட்டுவதாகவும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

அணைவரும் வருக! ஆனைமுகன் அருள் பெறுக!


கட்டுரை ஆக்கம்:
கலாபூஷணம்,
ஆறுமுகம் அரசரெத்தினம்,
களுதாவளை.