வடக்கு கிழக்கில் பல அமைப்புகள் பிரிந்து நின்று செயற்பட்டதால் இழப்புகள் அதிகம் ஏற்பட்டதே தவிர எந்த பயனும் கிடைக்கவில்லை

(ஏறாவூர் ஏஎம் றிகாஸ் )

எமது நாட்டிலே தமிழ் மக்கள் மிகவும் செறிந்து வாழுகின்ற வடமாகாணத்தை நழுவவிட்டால் தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழும் ஏனைய மாகாணங்களிலே பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள்  உண்டு என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள ஓர் அசாதாரண  நிலைமை மிகவிரைவில் சுமுகமான  நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். முதலமைச்சர் விக்னேஸ்வரன் மதிக்கத்தக்க ஒரு மனிதர். அதேபோன்று கௌரவ சம்பந்தன் அவர்களும் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். இந்நிலையில் இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த பல சக்திகள் முனைகின்றன. கடந்தகாலங்களில் புலம்பெயர்ந்தவர்கள் டயஸ் போராக்களை கொண்டு பிரிவினையை உண்டாக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் தற்போது மாகாண சபைக்குள் குழப்ப நிலையைத் தோற்றுவித்து பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்  

மட்டக்களப்பு- பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொழுது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ;,ஸ்ரீநேசன், கே.கோடீஸ்வரன், எஸ். வியாழேந்திரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதிபர் சக்கீலா ஜெயகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் இதன்போது இராஜாங்க அமைச்சர் பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். சுமார் 172 வருடங்கள் பழைமை வாய்ந்த இப்பாடசாலை கடந்தகால போர்ச்சூழலினால் வெகுவாகப்பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மலசலகூடம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தரம் 11 வரையிலான வகுப்புக்களில் சுமார் 250 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

இராஜாங்க அமைச்சர்  இராதாகிருஸ்ணன் இங்கு மேலும் பேசுகையில் மலையகத்தை பொறுத்த வரையில் நாங்கள் கடந்த காலங்களில் பிரிந்து நின்று செயற்பட்டதன் காரணமாக எமக்கு கிடைக்க வேண்டியப பல்வேறு உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது.இதன் காரணமாக நாங்கள் தற்பொழுது தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அனைவரும் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனால் நாம் பல வெற்றிகளையும் பெற்றிருக்கின்றோம்.

எனவே வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள   நிலைமை தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாகும்;. கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் பல அமைப்புகள் பிரிந்து நின்று செயற்பட்டதால் இழப்புகள் அதிகம் ஏற்பட்டதே தவிர எந்த பயனும் கிடைக்கவில்லை. தற்போதும் தமிழ் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் நாம் இடமளிக்கக்கூடாது.

தமிழர்கள் சில இடங்களில் பெரும்பான்மையாக இருந்தாலும் இன்னும் சில இடங்களில் சமஅளவிலும் பல பிரதேசங்களில் சிறுபான்மையாகவும் வாழ்கிறோம். இந்நிலையில்  நாங்கள் செறிவாக வாழுகின்ற வட மாகாணத்தை நழுவவிட்டால் தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கின்ற ஏனைய மாகாணங்களில் பிரச்சினைகள் அதிகமாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே வட மாகாணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளது. அதை நாங்கள் சரியான முறையில் கையாள வேண்டும் என்றார்.