திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்-2017


மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய திரௌபதை அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு, பாஞ்சாலிபுரம், அருள் மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவம் பாற்குட பவணி பெருவிழாவுடன் இணைந்த கதவு திறத்தலுடன்  செவ்வாய்க் கிழமை (11/07/2017) முதல் ஆரம்பமாகி தொடந்து பதினொரு நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் (21/07/2017) வெள்ளிக்கிழமை மாலைஅன்று இடம்பெறும் பூ மிதிப்பு எனப்படும் சிறப்பு தீமிதிப்புடன் இனிதே நிறைவுறும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் புளியந்தீவின் மத்தியில் பாடுமீன் வாவிக் கரையோரம் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் இவ் திரௌபதை அன்னையின் ஆலய வரலாறானது பாரம்பரியமிக்கதும், நீண்ட தொன்மையை உடையதுமாகும்.

இவ்வாலய வருடாந்த திருச்சடங்கில் பாற்குடப் பவணி பெருவிழா,ஆலாத்திப் பிள்ளைகள் தெரிவு, திருக்கல்யாணம் வெட்டும் நிகழ்வு, வனவாச நிகழ்வு, தவநிலைச் சடங்கும் அதன் தார்ப்பரியத்தை உணர்த்தும் நாடக நிகழ்வு, அம்மன் மஞ்சள் நீராடல், தீமிதிப்பு மற்றும் தேவாதிகளின் அருள் வாக்கு உச்சரிப்பு என்பன வருடா வருடம் இவ்வாலய உற்சவத்தை சிறப்பிக்கும் நிகழ்வுகளாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தீமிதிக்கும் பக்த அடியார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பதாக காப்பு கட்டி அதன் பின் அவ் அடியார்கள் கோவிலின் வெளியே செல்ல அனுமதியாது கோவிலிலே விரதம் இருந்து, முற்றாக வீரக்கொல்லி படுக்கையினால் தீ மூட்டப்பட்ட "18 அடி நீளமும் 3 அடி அகலமும் 1அடி ஆழமும்" கொண்ட தீக் குழியில் தங்களது நேர்த்தியை நிறைவு செய்ய வேண்டும் என்பது; இவ்வாலய உற்சவ வரலாற்றில் தொன்று தொட்டு பேணப்பட்டு வரும் உயர்ந்த சைவ மரபும் விழுமியமும் என்றால் அது மிகையில்லை.

எனவே இவ்வாறான சிறப்புக்கள் பொருந்திய இவ்வாலயத்திற்கு வழமை போன்று இம்முறையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பாகங்களில் இருந்தும் பக்த அடியார்கள் அம்மனின் அருள் பெற்று உய்வதற்காக வருடாந்த சடங்கில் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.