கிழக்கில் அமைதியும் ஒற்றுமையும் மேம்பட்டுள்ளது : கிழக்கு மாகாண ஆளுநர்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையும் அமைதியும் மேம்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண  ஆளுநர் ரோஹித் போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயருடன் முக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்தது. ஆயருக்கு ஜனாதிபதியின் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கும் கத்தோலிக்க தேவாலயங்களுடனான தொடர்புகளை ஆழமாக்கும் வகையிலும் ஆயரை நான் சந்தித்தேன்.

மட்டக்களப்புக்கான எனது கன்னி விஜயத்துடன், மட்டக்களப்பு ஆயரையும் சந்திக்க விரும்பினேன். ஆயருடனான சந்திப்பில் இரண்டு விடயங்கள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. போருக்கு பின்னரான அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடினேன்.

பிராந்தியம் வழமைக்கு திரும்புவதில் ஆயர் மிகவும் ஊக்கமாக செயற்படுகின்றார். மாவட்டத்திலுள்ள மக்களுக்கான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு மேலாக அனைத்து சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் அமைதி மேம்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைவரினதும் கல்வியை முன்னேற்றுவதில் நான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளேன்.அதுவே ஜனாதிபதியின் செய்தியும் கூட. எமது சமூகத்தினதும் இளைஞர்களதும் வாழ்வின் நீண்டகாலத்திற்கு கல்வி கூட வருகின்றது.அதனை நோக்கிய செயற்பாட்டிற்கு நாம் உதவி வழங்குகின்றோம்.

இந்த பிராந்தியத்தில் இளைஞர்களின் சிறப்பான நிலைமைக்கும் கல்விக்கும் பல்வேறு கத்தோலிக்க பாடசாலைகள் மிகவும் பாரிய பங்களிப்பு வழங்குகின்றன. கல்முனை பாடசாலை தொடர்புபட்ட பிரச்சினை குறித்து இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு தீர்வும் உள்ளது. அது குறித்து கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடியுள்ளேன். இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஆயரின் பரிந்துரையின் பேரில் நடக்க தீர்மானித்துள்ளோம்.