வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இன்று(20) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கான சிரமதான பணிகள் இடம்பெற்றது.

டெங்கு ஒழிப்புக்கு உதவி செய்து வாழ்க்கையை பாதுகாக்கும் தரப்பினராக மாறுவோம் நாம்...... எனும் தொனிப் பொருளுக்கமைய நாடளாவிய ரீதியில் அனைத்து தரப்பினராலும்  ஆட்கொல்லி நோயான டெங்குவினை கட்டுப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கமைவாக கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதன் தலைவரின் பணிப்புரைக்கமைவாக நாட்டின் அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் டெங்குவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கான சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் தி.சிவரூபன் தலைமையில் இடம்பெற்ற இவ் மாபெரும் சிரமதான பணியில்  வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச மீனவர் சங்க பிரதிநிதிகள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை  உத்தியோகத்தர்கள். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை அலுவலர்கள், துறைசார்  உத்தியோகத்தர்கள்  அரச துறைசார் அதிகாரிகள், வாழைச்சேனை மீன்பிடி துறைமுக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காலை 9.00 மணியளவில் துறைமுக வளாகத்தில் ஒன்று கூடல் நிகழ்வில் துறைமுக முகாமையாளர் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தரின் டெங்கு மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விளக்கமளிப்பின் பின்னர் துறைமுக வளாகம் முழுவதும் கலந்து கொண்டவர்களால் நண்பகல் வரை துப்பரவு பணி செய்யப்பட்டது.