இலங்கை முழுவதும்,விரல் விட்டு எண்ணக்கூடிய வீணை இசைக்கலைஞர்களே உள்ளனர்

(துறையூர் தாஸன்)

விபுலானந்தரை முன்னிறுத்தி நாங்கள் பேசுவது,செயற்படுவது என்பது அத்தகைய ஆளுமையினருக்கு சமதையான,அதற்கும் மேலான ஆளுமைகளை உருவாக்கி விடுவது எங்கள் நோக்கமாகும் என விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினரால் விபுலானந்த அடிகளாரின் நினைவு தின நிகழ்வு,அழகியற் கற்கைகள் நிறுவக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற போது,கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,விபுலானந்தரைப் போன்ற ஒரு இளந்தலைமுறை அறிஞர்களை, அறிவுபூர்வமாக கலையுலகில் ஆய்வுகளை முன்னெடுக்கின்ற ஒரு ஆய்வுத் திறன்கொண்ட அறிஞர்களை உருவாக்குகின்ற நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.


விபுலானந்தர் பன்முகப்பட்ட ஆய்வாளராக மட்டுமல்லாமல்,ஒரு சமூக மயப்பட்ட ஆய்வுச்செயற்பாட்டை முன்னெடுத்து யாழ்நூல்,யாழ் என்ற தொன்மையான இசைக்கருவியை மீள கண்டுபிடிப்பு செய்வதில் பெரிதும் உழைத்தவராவார்.

தமிழர்களுடைய தொன்மையான வீணை இசைக்கருவியை பிரபல்யப்படுத்துவதிலும் உழைத்து பல்வேறு துறைகளில் செயற்பாடு ரீதியாக தமது அறிவுச் செயற்பாட்டை முன்னெடுத்தவர்.வீணை இசைக்கலயை,கருவியை தமிழர்களுடைய தொன்மையான இசைக்கருவியாக பெருமிதம் கொள்கிறோம்.ஆனால் இன்று இலங்கை முழுவதும் விரல் விட்டு எண்ணக்கூடிய வீணை இசைக்கலைஞர்களே உள்ளனர்.ஒரு வலுவான வீணை இசை கலை பாரம்பரியத்தை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பது எங்கள் முன்னுள்ள ஒரு கேள்வியாகும்.

தமிழர்களுடைய தொன்மையான இசைக்கருவியான வீணையை இயக்குகின்ற ஒரு இளந்தலைமுறையினரை உருவாக்குவது எங்கள் முன்னுள்ள ஒரு பணியாக இருக்கிறது.விபுலானந்த அடிகளாரை முன்னிறுத்தி அழகியற் கற்கைகள் நிறுவகம் சார்ந்த பல்வேறு பாடப்பரப்புகளை எவ்வாறு ஆக்கபூர்வமாக முன்னெடுப்பது, எவ்வாறு ஒரு இளந்தலை முறையினரை தேச மற்றும் உலக மட்டத்திலும் தங்களை நிலை நிறுத்தக்கூடிய ஆளுமையினரை உருவாக்குவது மிக முக்கியமானது.

எங்களிடம் போதியளவு கலையாற்றல் மிக்க மாணவர்கள்,விரிவுரையாளர்கள் இருக்கிறார்கள்.நாங்கள் ஒரு கலைக்கூடத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை வரைந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.