பிரதிக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கம் - உலககேஸ்பரம் அரச பணியில் ஓய்வு

(சித்தா)
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கம் - உலககேஸ்பரம் அரச பணியில் 39 வருட காலச் வேவையைப் பூர்த்தி செய்து இன்று ஓய்வு பெறுகிறார்.
குருக்கள் மடத்தினைச் சேர்ந்த மாணிக்கம் - உலககேஸ்பரம் அவர்கள் மட்/குருக்கள்மடம் மெதடிஸ்த்த மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து பட்டிருப்பு மகாவித்தியாலயம், மட்/புனித மிக்கேல் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இடைநிலை, உயர்நிலைக் கல்வியனைத் தொடர்ந்தார். ஆசிரியர் தேர்விற்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய இவர் அப் போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்று 08.06.1978 இல் ஆசிரியப் பணியில் இணைந்தார் முதலாவதாக மட்/அம்பிளாந்துறை றோமன் மெதடிஸ்த்த மிஷன் பாடசாலையில் ஆசிரியராக கல்விப் பணியாற்றினார்.
1982/1983 காலப்பகுதியில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கணிதத் துறையில் பயிற்சி பெற்ற இவர் திருகோணமலை மாவட்டத்தில்  ஆசிரியப் பணியில் 5 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். இக் காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்து பயிற்றப்பட்ட பட்டதாரியாக தனது கல்வித் தகமையை உயர்த்திக் கொண்டார்.
தனது ஆசிரியப் பணியில் மாணவர்களாலும், பெற்றோர்களாலும், சக உத்தியோகஸ்த்தர்களாலும் பாராட்டத்தக்க வகையில் கணித பாடத்தை புகட்டிய இவர் அக் காலப் பகுதியில் பிரதியதிபராக, அதிபராக பணியாற்றி வந்தார். இவ்வாறான நிலையில் இன்னுமொரு பதவியுயர்வு இவருக்காக காத்திருந்தது. கல்வி நிருவாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தோற்றிய இவர் அதிலும் வெற்றிகண்டு கல்வி நிருவாக சேவையில் இணைந்து கல்வி நிருவாகப் பணிகளை ஆற்றி வந்தார். கோட்டக் கல்விப் பணிப்பாளராக போரதீவுப்பற்று, பட்டிப்பளை போன்ற பிரதேசக் கல்விப் காரியாலயங்களில் சேவையாற்றி வந்தார்.
தொடர்ந்து பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், கல்குடா கல்வி வலயத்தின் நிருவாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும்,  ஓய்வு பெறும் வரை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாக்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வந்தார். தனது சேவைக் காலத்தில் இவர் பதவியுயர்வுகளை பெற்றுக் கொள்வதுடன் நின்று விடாமல் கல்வியிலும் உயர் சித்திகளைப் பெற்றார் இந்த வகையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வியில் முதுமாணி பட்டத்ததையும் பெற்றுக் கொண்டார்.
மாணிக்கம் - உலககேஸ்பரம் அவர்கள் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியதுடன் தற்போது முதன்மையாசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார். தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக் கல்வி பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிரேஸ்ட போதனாசிரியராக தனது சேவையை விரிவுபடுத்திக் கொண்டமையும் சிறப்பான அம்சமாகக் கொள்ளமுடியும்.