புனானை பிரச்சினை தீராவிட்டால் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படும்: சுமனரத்ன தேரர்

வாழைச்சேனை வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இனம் இன்னொரு இனத்தோடு மோதி இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுமென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மங்களராமய விஹாரையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பள்ளிவாசல் தொடர்பாக நாட்டின் தலைவர்கள், உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்கள் இன்று தனிமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள தேரர், கரையோரப் பகுதியான அறுகம்பை தொடக்கம் மூதூர் வரைக்கும் ஏதாவது ஒரு தமிழ் நகரம் இருக்கின்றதா என கேள்வியெழுப்பியுள்ளார்.


தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் காடுகளிலும் வசதியற்ற பிரதேசங்களிலும் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட தேரர், இம் மக்களின் உரிமை தொடர்பாக கதைப்பதற்கு சிங்கள மக்களுக்கு உரிமை உள்ளதென மேலும் தெரிவித்துள்ளார்.