ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவ செயற்பாடுகளில் திட்டமிடலின் முக்கியத்துவத்துவம்


இன்றைய நவீன சமகால வரலாற்றை நோக்கும் போது முகாமைத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனை முறையாகக் காணப்படுகின்றது. முகாமைத்துவ சிந்தனையானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தோற்றம் பெற்றுவிட்டது. முகாமைத்துவம் பற்றிய தத்துவங்கள் கி.மு 3000 – 4000 ஆண்டு காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளதனை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக கி.மு 2900 ஆண்டளவில் எகிப்தில் 481 அடி உயரமான பிரமிட் முகாமைத்துவ சிந்தனையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.

முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தினை முன்வைத்தவர் மேரி பாக்கர் பொலட். இவர் முகாமைத்துவம் என்பது ஊழியர்களைக் கொண்டு கருமங்களை மேற்கொள்வது தொடர்பான ஒரு கலையாகும் எனக் குறிப்பிட்டார். அதாவது நிறுவனத்தின் வளங்களை திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல் என்பன மூலம் நிறுவனத்தின் இலக்கினை பயனுறுதி மிக்கதாகவும் திறமையாகவும் அடைய முற்படும் செயற்பாடாகும்.

மேலும் பல முகாமையாளர்கள் முகாமைத்துவம் தொடர்பாக பல வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர். பிறீச் என்பவர் முகாமைத்துவம் தொடர்பாக குறிப்பிடுகையில் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தைக் கொண்டு செயற்படுகின்றன. அந் நோக்கத்தை அடைவதற்கு தமக்குக் கிடைக்கும் மனித வளம், பௌதீக வளம் என்பவற்றை பயன்படுத்தி முகாமையினர் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல் எனும் செயற்பாடுகளை உள்ளடக்கிய சமூகச் செயற்பாடு முகாமைத்துவம் எனக் கூறுகின்றார்.

பீற்றர்சனும் பிளவ்மனும் குறிப்பிடுகையில் ஊழியரின் நோக்கத்தை அடைந்து கொள்வதன் ஊடாக நிறுவனத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ள ஒரு கருமமே முகாமைத்துவம் எனப்படும். இதன்படி ஊழியர்களுக்கான நலன்களை பெற்றுக்கொடுத்தல், நிறுவனத்தின் நோக்கமான இலாபத்தை அடைய வைத்தல் எனும் இரு முரண்பட்ட நோக்கங்களை இணங்க வைப்பதே முகாமையின் கடமை என கூறப்படுகின்றது.

டோவர் என்பவர் நிறுவனங்கள் தமது உபாயங்களை அடைந்து கொள்வதற்கு ஊழியர்களை முகாமை செய்யும் கருமமே முகாமைத்துவம் எனக் குறிப்பிடுகின்றார்.

கோக் மற்றும் ஜோன்சன் ஆகியோர் முகாமைத்துவம் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உறுதியான குறிக்கோளை அடைவிப்பது தொடர்பாக வளங்களையும் சேவையையும் பயன்படுத்துவதும் அவற்றை ஒழுங்கமைப்பதுமான செயற்பாடு என வரைவிலக்கணப்படுத்துகின்றனர்.
திட்டவட்டமான நோக்கத்தை நோக்கி சகல முயற்சிகளையும் ஒரு முகப்படுத்துதல் முகாமைத்துவம் எனப்படும். E.L.F பிரச் என்பவர் அருமையான வளத்தினைப் பயன்படுத்தி நிறுவனத்தின் இலக்கினை அடைய முற்படும் கருமம் முகாமைத்துவம் என்கின்றார்.

ஒரு நோக்கத்தினை அடைவதற்கு ஆளணியினரது செயற்பாடுகளை வழிநடத்தும் ஒரு கலை முகாமைத்துவம் எனப்படும். சர்வதேச கல்விக் கலைக்கழஞ்சியம் (The International Encyclopedia of Education) குறிக்கோளை உருவாக்குதல், தெளிவான நிகழ்ச்சித் திட்டத்தினை அபிவிருத்தி செய்தல் அதனை வெற்றிகரமாக அடைவதற்கேற்ற வகையில் வசதிகளைத் திட்டமிடுதலும் பின்னூட்டலை வழங்குவதும் மாற்றங்களை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்காணித்து ஊக்குவிப்பை வழங்குவதும் முகாமைத்துவம் எனக் குறிப்பிடுகின்றது.

எனவே முகாமைத்துவம் என்பது தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்களை பயன்தரும் வகையில் அடைவதற்காக பிறரின் ஒத்துழைப்பு, பங்குபற்றுதல், தொடர்புறுதல் என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒரு சமூகச் செயன்முறையே முகாமைத்துவமாகும். அதாவது ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்காக அந் நிறுவனத்தில் உள்ள மனித, பௌதீக வளங்களைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், கண்காணித்தல், நெறிப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் முகாமைத்துவம் எனப்படும். அந்தவகையில் முகாமைத்துவ வரைவிலக்கணத்தில் குறிப்படப்படும் முக்கிய விடயங்கள்

நிறுவனம்
குறித்த ஒரு பொது இயல்பு ஒன்றை அடைவதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் குழுவாக ஒன்றிணைந்து செயற்படும் அமைப்பை குறிக்கும்.

வளம்
குறித்த ஒரு நிறுவனம் ஒன்றின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படும் அனைத்தும் வளங்கள் எனப்படும். இவ் வளங்கள் சுருக்கமாக 5அ  என அழைக்கப்படும்.

அவையாவன:

Men - மனித வளம்
Money- பணம்
Materials - மூலப் பொருட்கள்
Machine  – பொறிகள்
Methods – முறைகள்

இலக்கு
குறித்த நிறுவனமொன்று நீண்ட காலத்தில் அடைய உத்தேசித்துள்ள பரந்தளவான பெறுபேறு இலக்கு எனப்படும். நிறுவனமொன்றின் குறிக்கோள் தொடர்பான ளஅயசவ பண்புகள் பின்வருமாறு
Specific - குறிப்பானது
Measurable - அளவிடக்கூடியது
Achievable - உண்மையானது
Realistic - காலவரையறையானது

செயல்திறன்
நிறுவனத்தின் நோக்கத்தினை முழுமையான அளவில் அடைந்து கொள்வதற்காக நிறுவனத்தினால் வரையறுக்கப்பட்ட முறைகளை திறம்பட பின்பற்றி நிறைவேற்றப்படுவதை குறிக்கும்.

வினைத்திறன்
நிறுவனத்தின் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி குறைந்தளவு விரயத்துடன் கூடியளவு வெளியீட்டைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கும்.

உற்பத்தித் திறன்
நிறுவனத்தின் குறித்த ஒரு காலப்பகுதியில் உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் இடையிலான தொடர்பே உற்பத்தித் திறன் எனப்படும்.
எனவே குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதற்காக அருமையாகக் கிடைக்கும் வளங்களை அதி உச்ச நேரப் பயன்பாட்டில் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகின்ற செயற்பாடே முகாமைத்துவமாகும். ஒரு குறிக்கோளின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் சிறந்த முகாமைத்துவம் அங்கு இருக்க வேண்டும். இந்த வகையில் முகாமைத்துவத்தில் திட்டமிடல் ஒரு கூறாக உள்ளது. அதாவது முகாமைத்துவ செயற்பாடுகள்
1. திட்டமிடல்
2. ஒழுங்கமைத்தல்
3. கட்டளையிடல்
4. இயைபாக்கல்
5. கட்டுப்படுத்தல்
என்பனவாகும். இவ் வரைவிலக்கணத்தில் இரண்டு முக்கிய பகுதிகள் காணப்படுகின்றது.
1. நான்கு முகாமைத்துவ கருமங்களான திட்டமிடல், ஒழுங்குபடுத்தல், கட்டுப்படுத்தல், வழிநடத்துதல்
2. வினைத்திறன் வாய்ந்த முறையில் நிறுவனத்தின் குறிக்கோளை அடைதல்.
திட்டமிடல் : எதிர்காலத்தை ஆராய்ந்து செயற்திட்டத்தை ஆயத்தம் செய்தல்.

ஒழுங்கமைத்தல் : தொழில் முயற்சியின் மனித பௌதீக மூலவளங்களைக்                                                கட்டியெழுப்பலும் அவற்றை ஒழுங்குபடுத்தலும்.

கட்டளையிடல் : நிறுவனத்தின் ஆளணியினரைத் தம் பணிகளை                                                               ஆற்றப்பண்ணுதலும்.

இயைபாக்கம் : எல்லாச் செயற்பாடுகளையும் ஒருங்கு சேர்த்தலும்                                                         இணைத்தலும்.

கட்டுப்படுத்தல் :விதிகள், அறிவுறுத்தல்கள் என்பவற்றிற்கு இயைபாக                                                     சகலதும் நடைபெறுகின்றதா என்பதை கவனித்தல்.

தலிக், உர்விக் எனும் முகாமைத்துவ நிபுணர்களால் முகாமைத்துவ செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்து PDOSCORB  எனும் சொற்றொடரை உபயோகித்தனர். இச் சொற்றொடர் பின்வரும் செயற்பாடுகளை குறிக்கின்றது.
P – திட்டமிடல்
O – ஒழுங்கமைத்தல்
D – நெறிப்படுத்தல்
S - ஆளணி வழங்கல்
CO - இயைபாக்கல்
R – அறிக்கை செய்தல்
B – பாதீடு தயாரித்தல்
கடந்த சில ஆண்டுகளாக முகாமைத்துவச் செயற்பாடுகள் தொடர்பாக பகுப்பாய்வு செய்து பின்வரும் மூலங்களை குறிப்பிட்டனர்.
1. உருவாக்குதல் (திட்டமிடல்)
2. வளங்களை ஒருங்கிணைத்தல் (ஆளணியிடல்)
3. மேற்பார்வை
4. மதிப்பிடல்
திட்டமிடுபவரும் முகாமையாளரும் ஒரு குறித்த குறிக்கோளை எய்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அபிவிருத்தி இலக்கை அடைய திட்டமிடலும் முகாமைத்துவமும் முக்கிய அம்சங்களாக உள்ளன.
D = f (ptm) சமன்பாட்டின் மூலம்
D = Development (அபிவிருத்தி)
P = Planning(திட்டமிடல்)
M = Management (முகாமைத்துவம்)
F = Function (தொழிற்பாடு)
எனவே திட்டமிடலுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது எனலாம்.

திட்டமிடல் என்பது நிறுவனத்தின் நோக்கத்தினை வரையறுத்து அதனை அடையும் பொருட்டு செயற்பாடுகளை தீர்மானித்து அவற்றினை ஒன்றினைத்துக் கொள்வதனைக் குறிக்கின்றது. திட்டமிடலானது எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? எங்கு செய்ய வேண்டும்? யாரால் செய்யப்படல் வேண்டும்? என்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியமாகும். அதாவது திட்டமிடலானது எதிர்கால நிகழ்வுகள் தொடர்பாக நிகழ்கால தீர்மானத்தை மேற்கொள்கின்றது.
திட்டமிடலினை மேற்கொள்ளும் போது நான்கு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்கின்றது. அவையாவன....
1. நோக்கத்தினை வரையறுத்தல்
2. நோக்கத்தினை அடையும் பொருட்டு செயற்பாடுகளைத் தீர்மானித்தல்
3. செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வளங்களை ஒதுக்கீடு செய்தல்
4. செயற்பாடுகளை அமுல்ப்படுத்தல்
நிறுவனமொன்று மேற்கொள்ள இருக்கின்ற எந்தவொரு நடவடிக்கையும் திட்டம் எனப்படும். திட்டத்திலிருந்தே திட்டமிடல் உருவாகின்றது. திட்டமிடல் என்ற விஞ்ஞான ரீதியான ஒழுங்கு முறையில் அமைந்த செயல்முறையும் கல்வி அபிவிருத்தியுடன் பிணைக்கும் போது அது
கல்வித்திட்டமிடல் எனப்படுகின்றது. ஒரு நாட்டின் கல்வித் திட்டமிடலானது மூன்று முக்கிய விடயங்களை கருத்திற் கொண்டு செயற்படுத்தப்படுகின்றது. அவையாவன...

1. கடந்த காலப் புள்ளிவிபரங்கள்
2. தற்போது பயன்படுத்தக் கூடிய மனிதவளம், பௌதீக வளம், நேர வளம் போன்றன
3. எதிர்பார்க்கும் இலக்கு
திட்டமிடல் தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். கூன்டஸ் மற்றும் ஓடொனேஸ் என்பவர்கள் திட்டமிடல் ஓர் அறிவுத்திறன் வாய்ந்த முறையாகும். இது விழிப்புடன் நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றது. நோக்கம், விடயங்கள், கருத்தில் கொள்ள வேண்டிய மதிப்பீடு போன்றவற்றில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கு அடிப்படையாகக் கொள்கின்றது.
லூயிஸ் ஆலென் கூறுகையில் திட்டமிடுல் என்பது மதிப்பிடுதல், நோக்கம், கொள்கைகள், நிகழ்ச்சி நிரல்கள், செயல்முறைகள், பட்டியல்கள் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதலை உள்ளடக்கியதாகும்.
ஏர்னெஸ்ட் டேல் - எதிர்காலத்தில் அடைய வேண்டிய நோக்கங்களின் பட்டியல் மற்றும் அவற்றை அடைதலுக்கு தேவையான நடவடிக்கைகளின் திட்ட வரையறையே திட்டமிடலாகும். திட்டமிடலானது பின்வரும் சுற்று ஒழுங்கில் வகைப்படுத்தப்படுகின்றது.
1. முன் திட்டமிடல் (pre planning)
2. திட்ட தயார் நிலை   (plan preperation)
3. திட்ட உருவாக்கம்  (plan formulation)
4. திட்ட விளக்கம்  (plan elaboration)
5. திட்ட நடமுறைப்படுத்தல் (plan implemenyation)
6. திட்ட மதிப்பீடு (plan evaluation)
வை.ஸ்ரோர் என்பவரின் கருத்துப்படி கிடைக்கப் பெறுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களில் இருந்து உச்சப்பயனைப் பெற்று ஏதாவது ஒரு இலக்கினை எதிர்காலத்தில் அடைவதற்கு உரிய வகையில் கருமமாற்றுகின்ற முன் தீர்மானத்திற்குரிய ஏற்பாடுகளை செய்தல் திட்டமிடல் எனப்படும்.

வைற்குரோ என்பவரின் கருத்துப்படி திட்டமிடல் என்பது எதிர் காலத்தில் தொடர்புடைய யாதேனும் குறிக்கோள்களை எய்துவதற்கான அதனுடன் தொடர்புடைய மாற்று வழிகளை மதிப்பீடு செய்து அவற்றுள் பொருத்தமானவற்றைத் தெரிவு செய்து அவற்றுள் பொருத்தமானவற்றை  தெரிவு செய்து அதற்கமைய முன்கூட்டியே தயார் படுத்திக் கொள்ளும் தீர்மானமே திட்டமிடலாகும்.

இவ்வாறான வரைவிலக்கணத்தின் படி திட்டமிடலானது பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. அவையாவன

1. நோக்கங்களை அடைய உதவுகின்றது.
திட்டமிடலின் முக்கிய நோக்கமாகக் காணப்படுவது நோக்கங்களை அடைதலாகும். நிறுவனத்தின் பொது நோக்கத்தை மட்டுமல்லாது ஒவ்வொரு துறையின் நோக்கத்தையும் வரையறுத்துக் கூறுகின்றது. பணியாளர்கள் நிறுவனத்தை முழுமையாக நோக்கவும் அவர்களுடைய செயல் நிறுவனத்தின் நோக்கத்தை அடைய எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகின்றது. முகாமையாளர் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு நோக்கத்தை திருத்தியமைக்கவும் திட்டமிடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

2. செயற்பாடுகளை முன்கூட்டியே எடுத்துக் கூற உதவுகின்றது.
அதாவது நிறுவனத்தின் செயற்பாடுகளை ஒன்றிணைத்துக் கொள்ள உதவுகின்றது. எதிர்காலத்தில் எச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், எப்போது மேற்கொள்ளப்படல் வேண்டும், எவ்வாறு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை முன்கூட்டியே எடுத்துக் கூறுகின்றது.

3. ஒழுங்குபடுத்தல் கட்டுப்படுத்தலுக்கு உதவுகின்றது.
திட்டங்களின் படி செயற்பாடுகளை நிகழச் செய்யத் தூண்டும் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தலாம். அதாவது செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தி திட்டமிட்டபடி மேற்கொள்வதற்கு கட்டுப்படுத்துதலை பயன்படுத்துவதற்கு உதவுகின்றது.

4. வினைத்திறனான செயற்பாடுகளுக்கு உதவுகின்றது.
திட்டமிடல் நிறுவனத்தின் இயங்கு முறையில் திறமையையும் நிலையான தன்மையையும் ஏற்படுத்துவதால் செலவுகளைக் குறைத்து இயங்கு முறையில் சிக்கனத்தை உறுதிப்படுத்துகின்றது. அதாவது ஒன்றிணைக்கப்பட்ட குழு முயற்;சி, சீரான வேலைத்திட்டம், ஆழ்ந்து ஆராந்து முடிவு எடுத்தல் போன்றவற்றினை திட்டமிடலின் உதவியினாலே பெறமுடியும்.

5. எதிர்கால தற்செயல் நிகழ்விற்கு துணை புரிகின்றது.
எதிர்காலம் என்பது நிலையற்றதாக காணப்படுவதால் திட்டமிடல் மிகவும் அவசியமாகக் காணப்படுகின்றது. எதிர்காலத்தை முன்னோக்கிப் பார்க்கவும், உகந்த நடவடிக்கையை கண்டுபிடிக்கவும் திட்டமிடல் உதவி செய்கின்றது.
6. வளங்களின சிறந்த பயன்பாட்டிற்கு உதவுகின்றது.
தேவையான வளங்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளவும் அவற்றினை வினைத்திறனாகப் பயன்படுத்தவும் தேவையான வளங்களைப் பங்கிட்டுக் கொள்ளவும் உச்ச பயனைப் பெறவும் திட்டமிடல் அவசியமாகும்.

7. செயற்பாடுகளை ஒருங்கினைக்க உதவுகின்றது.
நோக்கத்தினை அடையும் வகையில் ஒவ்வொரு செயற்பாட்டையும் மேற்கொள்வதற்கும் ஒன்றிணைப்பதற்கும் திறன்பட உதவுகின்றது. உதாரணமாக மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரித்தல் எனும் போது இதனை அடைவதற்கு ஒவ்வொரு ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளையும் ஒன்றிணைப்பதற்கு திட்டமிடல் அவசியமாகின்றது.

8. பொறுப்புக்களைப் பகிர்ந்தளிப்பதற்கு உதவுகின்றது.
ஒவ்வொரு ஊழியரும் நோக்கத்தினை அடையும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அத்தோடு பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பதற்கும் உதவுகின்றது. வேலைச் சுமைகள், மன அழுத்தங்கள், தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் செயற்பாடுகள் என்பன உருவாகுவதைத் தவிர்க்க திட்டமிடல் உதவுகின்றது.

9. விபரங்களைக் குறித்துக் கொள்ள முடியும்.
நேர விரயத்திற்கான அடிப்படைக் காரணம் திட்டமிடல் இன்மையே என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சரியான திட்டமிடல் மூலம் நேர விரயத்தினைக் குறைத்துக் கொள்ள முடியும். மேலும் பௌதீக, மனித வளங்களின் வீண்விரயத்தைக் குறைப்பதற்கு திட்டமிடல் முக்கியத்தும் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. அதாவது நேரத்தையும் உழைப்பையும் வீண்விரயமாக்காது பயனுறுதி வாய்ந்த முறையில் பிரயோகிக்க உதவுகின்றது.

10. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நிச்சயமற்ற தன்மைகளை மதிப்பீடு செய்ய உதவுகின்றது.
திட்டமிடலை மேற்கொள்வதன் ஊடாக அடைய முடியாத நோக்கங்களைத் தவிர்க்கவும் மற்றும் வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்; திட்டமிடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

11. நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
நிறுவனத்தின் நோக்கத்தினை தடைகள் இன்றி வெற்றிகரமாக அடைவதற்கு உதவும். நிறுவனத்தின் குறிக்கோளில் கவனம் செலுத்தக் கூடியதாக காணப்படும். திட்டமிடலின் மூலம் தவறவிடப்பட்ட விடயங்கள், துறைகள் என்பவற்றை உணர்ந்து கொள்வதுடன் இன்னுமொரு தடவை தவறு ஏற்படாது தடுக்கவும் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் வேலைகளைத் திறன்பட ஒழுங்காக்கவும் மேற்கொள்ளவும் உரிய நேரத்தில் வேலைகளைச் செய்து முடிக்கவும் திட்டமிடல் உதவுகின்றது.
எனவே திட்டமிடலானது எதிர்பார்த்த இலக்குகளையும் நோக்கங்களையும் ஒழுங்கான முறையில் அடைந்துகொள்வதற்கும் நேரத்தினை சிறந்த முறையில் பயன்படுத்த முடிவதோடு எதிர்காலத்தில் செய்யக்கூடிய விடயங்களை முன்கூட்டியே திட்டமிடுவதால் நேரவிரயம் தடுக்கப்படவும் திட்டமிடலின் படி வேலைகள் பகிர்தளிக்கப்படுவதனால் வேலைச்சுமைகள், மன அழுத்தங்கள் தவறான முடிவிற்கு இட்டுச் செல்லும் செயற்பாடுகள் என்பன உருவாவது தடுக்கவும் திட்டமிடலின் மூலம் தான் தவற விட்ட விடயங்கள், குறைகளை உணர்ந்து கொள்வதுடன் இன்னொரு தடவை இவ்வாறாக தவறுகளைத் தடுப்பதற்கு வழியேற்படவும் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ளவும் வேலைகளை ஒழுங்காகவும் திறன்படவும் செய்து  முடிக்கவும்
வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் உரிய நேரத்திற்கு செய்து முடிக்க வேண்டிய வேலைகளை செய்து முடிக்கவும் பணவிரயத்தினை தவிர்த்துக் கொள்ளவும்திட்டமிடுவதற்கேற்ப பொறுப்புக்கள் ஒவ்வொருவரிடையேயும் பகிர்தளிக்கப்படுவதனால் பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் செயற்படவும் நிறுவனமோ அல்லது தனிநபரோ அபிவிருத்திப் பாதையை நோக்கி செல்லவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

தர்ஷனா தேவராஜன்
உதவி விரிவுரையாளர்,
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.