நம்மிடையே எழுச்சி காணும் மனமுறிவும், முரண்பாடும்



வாழ்க்கையில் பல சவால்களை நாம் எதிர்கொள்ள நம்மிடையே பல பிரச்சினைகள் காணப்படுகிறது. அந்த வகையில் நம்மிடையே மேலோங்கிக் காணப்படும் மனமுறிவு , முரண்பாடுகள் போன்ற பிரச்சினைகளை நோக்குவோம் .ஒரே நேரத்தில் இரண்டு முரண்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும்படி நேரிடும் போது ஏற்படும் நிலைகளை முரண்பாடெனக் கூறமுடியும். முரண்பாடுகள் பல வகைப்படும் அவை மனிதர்களிற்கும் சூழ் நிலைக்கும் ஏற்ப மாறுபடும். அந்தவகையில்  குழந்தைகளை மையமாக கொண்டு  பின்வரும் உதாரணங்களை நோக்குவோம்



குழந்தைப்பருவத்தில் அழகான நாய்க்குட்டியொன்றை காணும் குழந்தை அதனுடன் விளையாட விரும்புகிறது. ஆனால் அது தன்னைக் கடித்துவிடுமோவெனப் எனப்பயந்து அதனை நெருங்கத் தயங்குகிறது. அழகான பலவிளையாட்டுப் பொருட்களைக் காணும் குழந்தை அவற்றுள் எதனை எடுப்பது எனத் தெரியாமல் திகைக்கிறது. ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்ல விரும்பவில்லை எனவே பாடசாலைக்குச் செல்லவும் விரும்பாமல் வீட்டில் இருக்கவும் முடியாமல் தடுமாறுகிறது.

இந்த உதாரணங்களை நோக்கும் போது ஒரு குழந்தை ஒரே நேரத்தில் பல ஊக்கல்களுக்கிடைப்பட்டு, அவற்றுள் எதைத் தெரிவு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவதைக் காண்கிறோம். இந்தத் திணறல் அல்லது தடுமாற்றத்தையே மனமுரண்பாடு என்கிறோம்.
மனமுறிவு, முரண்பாடு தோன்றுவதற்கான காரணிகள்

மனமுறிவுக்குப் பலகாரணிகள் உள்ளன. அவை மன முரண்பாட்டுக்கு நேரடிக் காரணியாகவிட்டாலும், அவை மனமுறிவுக்குக் காரணமாவதால் மறைமுகமாக  மனமுரண்பாட்டுக்கான காரணிகளாகின்றன. எனவே மனமுறிவுக்கான காரணிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அவை,

1. சூழல் காரணி -  பிள்ளை நண்பருடன் விளையாட விரும்பும் போது மழை வந்து இடையூறு செய்தல், வீட்டிற்கு வரும் விருந்தினரால் பிள்ளையின் படிப்புத் தடைப்படல்.

2. சமூகக் காரணி -  சமூகப் பழக்கங்கள், ஒழுங்குகள், சாதி சமய மனப்பான்மைகள் பிள்ளை இலக்கையடையத் தடைசெய்யலாம்.

3. ஆளுமைக் காரணி -  பிள்ளையின் உடல், உள, சமூகக் குறைபாடுகள்.

4. பொருளியற் காரணி -  வேலையின்மை, பஞ்சம் போன்றன.

5. மனிதத் தொடர்புக் காரணி -  நண்பர், ஆசிரியர் ஆகியோரிடமிருந்து அன்பு, ஆதரவு பெறமுடியாமை . இக்காரணிகள் மனமுறிவுக்குக் காரணங்களாகின்றன. இவை மனமுரண்பாட்டுக்கும் காரணிகளாகலாம்.


மன முரண்பாடுகளை விருப்பு வெறுப்பு அடிப்படையில் மூன்று வகையாகப் பகுத்துக் கூறலாம்ளூ

1. நெருங்குதல் -  நெருங்குதல் முரண்பாடு - இவ்வகை முரண்பாட்டில் ஒருவரிடம் சம விருப்புடைய இரண்டு இலக்குகள் தொழிற்படும். உதாரணம்: இரண்டு சினிமாப் படங்களில் எதற்குப் போவது

2. தவிர்த்தல் -  தவிர்த்தல் முரண்பாடு - இவ்வகை முரண்பாட்டில் ஒருவர் இரண்டு தவிர்க்கும் முயற்சிகளில் எதைத் தவிர்ப்பதென்றறியாது திண்டாடுகிறார். உதாரணம்: ஆசிரியரின் தண்டனை - படிப்பு எதைத் தவிர்ப்பது?

3. நெருங்குதல்  - தவிர்த்தல்  - இவ்வகையில் ஒருவன் தெரிவு செய்ய வேண்டிய இரண்டில் ஒன்று உதாரணம்: ஒரு பிள்ளை பரீட்சையில் வெற்றி பெற விருப்பம்ளூ தோல்வி கிடைக்கும் என்ற பயத்தால், பரீட்சைக்குச் செல்ல மறுத்தல்.

மனமுறிவு, முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகள்.

தீவிரமான மனவெழுச்சி, அதிர்ச்சிகள், மனமுறிவுகள், மனமுரண்பாடுகள் என்பவற்றால் மனத்தின் சமநிலை பாதிக்கப்படுகிறது. அப்போது உள்ளம் தன்னைக் காப்பதற்காக பலவகைச் சீராக்கல் வழிகளில் ஈடுபடுகிறது. இச்சீராக்கலால் தோல்வியின் வேதனை தணிகிறது. இம்முறைகளில் சில பொருத்தமானவை. சில பொருத்தமற்றவை. பொருத்தமானவற்றைக் கடைப்பிடித்தால் நன்மை விளையும். பொருத்தமற்றவற்றை மேற்கொண்டால் கேடுவிளையும். எனவே மனமுறிவு முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை சரிவர கடைப்பிடிக்க வேண்டும்.

போரிடுதல்  -  இதில் மூன்று வகை உள்ளன.

(அ) நேரான போர்       - ஒரு குழந்தை மற்றொரு குழந்தையோடு போட்டியிட்டுத் தோற்றால் நேராகவே அடிக்கிறது, ஏசுகிறது.

(ஆ) மறைமுகமான போர்  - தன்னை வென்ற பிள்ளையை அடிக்கவோ, ஏசவோ, முடியாதவிடத்து கோள்கூறல், குறை சொல்லல்.

(இ) இடம்பெயர்ந்த போர்   - தன்னை வென்ற பிள்ளையை அடிக்கவோ குறைகூறவோ முடியாதவிடத்து  தன்னிலும் வலிமை குறைந்தவரோடு சண்டை பிடித்தல்

எல்லாக் குழந்தைகளும் வெற்றி பெறக்கூடிய துறைகளில் ஊக்கமளித்தால் இப்போர் முறையைத் தவிர்க்கலாம் என்பதை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. நியாயம் காணல் - மனமுறிவுற்ற ஒருவர். தனது தோல்விக்கு சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடியதான காரணமொன்றைக் கூறிச் சமாளித்தல்;;;; இம்முறையின்  தாற்பரியமாகும். உதாரணம் - பரீட்சையில்; சித்தியடையாத பிள்ளை ஆசிரியர் சரியாகக் கற்பிக்கவில்லையென்று கூறிச் சமாளிக்கிறது. இவ்வகை முறைகள் 'இனிப்பு எலுமிச்சை' 'புளித் திராட்சை' முறைகளெனக் கருதப்படுகின்றன. ஆசிரியர் பிள்ளையின் வெற்றி கருதி நன்றாகக் கற்பித்தால் குழந்தைக்கு  இச்சீராக்கல் முறை அவசியமாகின்றது.

2. ஏற்றிக் காணுதல் - ஒருவர் ஒரு முயற்சியில் தோல்வியடைந்தால், தன்னிடமுள்ள குறைபாடுகள் மற்றவர்களிடமுள்ளன எனக் கூறி ஏற்றிக் காணுதல். இதன்மூலம் தன்னைத் தானே தேற்றிக் கொள்வது இம்முறையின் தாற்பாரியமாகும். ஆசிரியர் எல்லாப் பிள்ளைகளும் வெற்றி காணுமாறு திட்டமிட்டுச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தால், இம்முறை பிள்ளைக்கு தேவைப்படாது.

3. பிரதியீடு செய்தல் - இச்சீராக்க முறையில் இரு வகைகள் உள்ளன.

(i) நேரான பிரதியீடு  -   ஒரு துறையில் தோல்வியேற்பட்டால்     மனம் தளராது அதே துறையில் வெற்றி
பெற மேலும் முயலுதல். உதாரணம்- கணிதத்தில் குறைந்த புள்ளி பெற்ற பிள்ளை, முயன்று பயிற்சி செய்து அதிக புள்ளி பெறுதல்.

(ii) மறைமுகமான பிரதியீடு –  ஒரு துறையில் தனக்கு ஏற்பட்ட
தாழ்வுணர்ச்சியை வேறொரு துறையில்       கிட்டிய வெற்றியால் சீராக்க முனைவது   உதாரணம்: படிப்பில் பின்தங்கிய பிள்ளை விளையாட்டில் வீரணாகத் திகழ்தல்.

இச் சீராக்க முறையில் ஆசிரியர் பிள்ளைகளை ஊக்குவிக்கலாம்.


4. நன்நெறிப் படுத்தல் -  உள உந்தல்களை சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்வழியில் இட்டுச் செல்வதை நன்நெறிப்படுத்தல் என்கிறோம். கட்டிளைஞர் தமது பாலுந்தல்களை ஓவியம் வரைதல், இலக்கிய ஈடுபாடு என்பவற்றில் வழிப்படுத்தலாம். இது நன்நெறிப்படுத்தலாகும். இதற்கு ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.


5. எதிர்த்தாக்கம் உண்டுபண்ணல் -  சமூகத்தால் ஏற்கப்படாத நடத்தைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள அவற்றுக்கு எதிரான நடத்தையைக் காட்டுதல் எதிர்த்தாக்கமாகும். ஒருவன் தன்னிடமுள்ள பாலுந்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அளவுமீறிய அறநெறி ஒழுக்கத்துடன் நடப்பதை இதற்குகாரணமாகக் கொள்ளலாம். இதற்கு ஆசிரியர் வழிகாட்டலாம்.


6. ஒன்றித்தல் - தன்னிடம் இருக்க வேண்டுமென ஒருவன் விரும்பும் இயல்புகளை வேறோருவனிடம் கண்டு அவன்போல் நடந்து கொள்ளல் ஒன்றித்தலாகும். இதனால் மனக்குறை தீர்கிறது. இன்று பல இளைஞர் நடிகர்களுடன் ஒன்றிக்கிறார்கள். நல்ல நடத்தையுடைய உயர்ந்தோருடன் மாணவர் ஒன்றிக்க ஆசிரியர் வழி காட்டலாம்.

7. பிறர் கவனத்தையீர்த்தல் - குறித்த ஒரு துறையில் தோல்வியடைந்து, அதனால் மற்றவர்களின் கணிப்பைப் பெறமுடியாத மனவேதனை கொண்டோர் வேறு சில முறைகளால் பிறர் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதை இம்முறை குறிக்கும். வகுப்பில் சடுதியான ஒலி எழுப்புதல், ஆசிரியராலும் மாணவர்களாலும் கணிக்கப்படாத மாணவர் கரும்பலகையைத் துடைக்க விரைவில் முன்வரல் இதற்கான ஒரு உதாரணமாகும்.

8. கெட்ட நடத்தைகளில் ஈடுபடல் - தமது முயற்சிகளில் தோல்வியடைந்தோர் மதுபானம் புகைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவர். இது பிழையான சீராக்க வழியாகும். ஆசிரியர் இவர்களை நல்வழிப்படுத்தலாம்.

9. தனிமை விருப்பம் - தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத சிலர் தனிமையில் ஒதுங்கிக் கொள்வர். ஆசிரியர் கவனத்திலிருந்து தப்பிக் கொள்ள கடைசி வரிசை மூலையில் இருந்து கொள்வர். இவர்களை ஆசிரியர் கவனித்து பொருத்தமான வழியில் செயற்பாடுகளில் ஈடுபடுத்த முயல வேண்டும்.
10. குழந்தை போல் நடத்தல் - சிலர் சில சந்தர்ப்பங்களில் மற்றவரின் அனுதாபத்தைப் பெறக் குழந்தை போல் அழுதல், பிடிவாதம் பிடித்தல்;;;, தெரியாது என்று கூறுதல் முதலிய நடத்தைகளைக் காட்டுவர். இவர்கள் தமது முதிர்ச்சிக்கேற்ற நடத்தைகளில் ஈடுபட ஆசிரியர் ஆவனம் செய்தல் வேண்டும்.

11. பகற்கனவு காணுதல் - சாதனைகளை நிலைநாட்ட முடியாத பலர் பகற் கனவு காண்பதால் மன அளவில் அதைப் பூர்த்தி செய்ய முயன்று ஆறுதலடைகின்றனர். பகற்கனவு ஒருவனுடைய விருப்பம், மனமுறிவு, நம்பிக்கை, ஏமாற்றம் என்பவற்றைப் பிரதிபலிக்கிறது இப்பகற்கனவு அதிக சாதனை உந்துதலளிக்கக் கூடும்  என்பதால் நல்லதெனக் கருதப்பட்டாலும், வகுப்பறையில் அதிக பகற்கனவு காண இடமளியாத வகையில் போதிய பணிகளைப் கொடுப்பது நல்லது.

12. தற்கொலை முயற்சி – மனமுறிவடைந்த சிலர் தற்கொலை முயற்சியில் இறங்குவர். தற்கொலை செய்வதாக மிரட்டுதல், உள நரம்பு நோய்க்கான அறிகுறியுமாகும். தற்கொலை முயற்சி மிகக் கோழைத்தனமான பின்வாங்கும் சீராக்க முயற்சியாகும். ஆசிரியர் இதை உணர்ந்து தக்கவாறு செயற்பட வேண்டும்.

13. உடல், உளக் கோளாறுகள் - மனமுறிவு காரணமாக சிலருக்கு உளக் கோளாறுகளும், உடற் கோளாறுகளும் ஏற்படலாம். தெருவில் எல்லாக் கதவுகளையும் தட்டுதல், எல்லாப் பொருள்களையும் முகருதல், அடிக்கடி கைகழுவுதல் முதலிய நரம்புப் பிணிகள் ஏற்படலாம். சிலர் எல்லோரிடமும் சந்தேகம் கொள்வர். தம்மில் ஏதோ வருத்தம் உள்ளதாகக் கூறிக் கொள்வர். சிலருக்கு வயிற்றோட்டம், தலையிடி, வயிற்றுப்புண் போன்ற உடற் கோளாறுகளும் ஏற்படலாம். சிலருக்கு மனநோய்களும் ஏற்படலாம். இவற்றைக் கருத்திலிருத்தி ஆசிரியர் குழந்தைகளை பொருத்தமான சீராக்க முறைகளுக்கு வழிகாட்டல் அவசியம்.

இதுவரை கவனித்த செயற்பாடுகள் தீவிர மனவெழுச்சி, அதிர்ச்சிகள், மனமுறிவு, மனமுரண்பாடு யாவற்றுக்கும் பொருத்தமானவை. மனமுறிவுக்கும் மனமுரண்பாட்டுக்கும் தொடர்புண்டு. எல்லாமே உள இயல்பு கொண்டவை இவற்றைக் கருத்திற்கொண்டு பிள்ளைகளின் மனமுரண்பாட்டுத் தீர்வுக்கு உதவுதலும், வழிகாட்டலும் செயற்படுதலும்  ஆசிரியரின் பொறுப்பாகும்.

டிலானி யேசுஐயா,
உதவி விரிவுரையாளர்,
கல்வி பிள்ளைநலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்,