மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றது

மாலபே, நெவில் பெனாண்டோ தனியார் மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் ஒப்பந்தம், இன்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
 
இம்மருத்துவமனை பாரிய செலவில் நிர்மாணிக்கப்பட்டு சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் போதான வைத்தியசாலையாக இயங்கி வந்தது. ஆயினும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை மூடுமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், குறித்த மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டமையினால் அதன் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் முடிவிற்கு அமைச்சரவை அனுமதியளித்ததை அடுத்து, இன்றைய தினம் (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அம்மருத்துவமனையை உத்தியோகபூர்வமாக அரசாங்கம் கையேற்கும் ஒப்பந்தத்தில் கலாநிதி நெவில் பெனாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
 
இவ்வைபத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகையில், இம்மருத்துவமனை மூலம் மக்களுக்கு தரமான வைத்திய சேவைகளை வழங்குவதற்கும், நிர்வாக குழுவொன்றின் மூலம் ஒரு சுதந்திர வைத்தியசாலையாக அதனை நிர்வகிக்கவும் எதிர்பார்ப்பாதாகவும் தெரிவித்தார்.