ஓட்டமாவடியில் நான்கு உணவகங்களுக்கு எச்சரிக்கை

ஒட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இதன்போது, நான்கு உணவகங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.

உணவகங்களில் தூய்மையின்றி இருப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து இன்று ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் சுகாதார வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட உணவு, ஒளடத பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகள் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர்.

அடுத்து மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும், அந்த உணவகங்களில் பாவனைக்கு உதவாத பொருட்கள் மற்றும் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பழுதடைந்த பழவகைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட உணவகங்களுக்கு ஒரு வார காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் தங்களது உணவகங்களில் உள்ள குறைகளை திருத்தி அமைக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதனை அவர்கள் திருத்தி அமைக்காதவிடத்து அதன் உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் மேலும் தெரிவித்தார்.