இராணுவ புலனாய்வு அதிகாரி 2 கிலோ தங்கத்துடன் கைது

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இரண்டு கிலோ நிறையுடைய தங்க நகைகளை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். விமான நிலையத்தில் பணியாற்றி வரும் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தங்க நகைகளை மிகவும் சூட்சுமமான முறையில் விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துச் சென்றபோதே சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார். இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது.

கைப்பற்றப்பட்டுள்ள மொத்த தங்க ஆபரணங்களின் பெறுமதி 91 இலட்சம் ரூபாவென விசாரணைகளை முன்னெடுத்துவரும் சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

சிங்கப்பூரிலிருந்து நேற்றுக் காலை யு.எல் 309 என்ற பயணிகள் விமானத்தில் இலங்கை வந்தடைந்த அடையாளம் காணப்படாத நபரொருவரே தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் கடத்தியுள்ளார்.

தங்க நகைகளை கடத்திவந்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடத்தல் காரருக்கு உதவி செய்யும் வகையிலேயே மேற்படி இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி தனது முழங்கால் காப்பங்கிக்குள் இத்தங்க நகைகளை மறைத்து விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்துள்ளார்.

நேற்றுக் காலை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட இந் நபர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே அவரது முழங்கால் காப்பங்கிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி, சுங்க அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அ​தேநேரம் தங்க நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டுக்குள் நகைகளை எடுத்து வந்தவர் பற்றிய எவ்வித தகவல்களும் நேற்று மாலை வரை கிடைக்கவில்லையென்றும் அவர் கூறினார். இக்கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் கும்பலை அடையாளம் காணும் வரை கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் அதிகாரி தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரென்றும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத கடத்தல்காரர்களுக்கு உதவும் விமான நிலையத்தின் அதிகாரிகள் தொடர்பில் சுங்கத் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் அண்மையில் விமானப்படை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவருவரும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது