மேலும் 40 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேலும் 40 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றா நோய்களுக்கான மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும் அவற்றுள் அடங்குவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டு குழுவின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன் குறிப்பிட்டார்.

இந்த மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக அவர் கூறினார்.

48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிக்க முடியும் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் டொக்டர் பாலித அபேகோன் சுட்டிக்காட்டினார்.

கண் வில்லை மற்றும் இருதய சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் Stents இன் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.