A/L வினாக்கள் வெளியான விவகாரம் விசாரணைக்கு உத்தரவு

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின், இரசாயனவியல் பாட வினாக்கள் வெளியானமை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இரசாயனவியல் பாடத்திலிருந்த சில வினாக்கள், ஆசிரியர் ஒருவரால்  பரீட்சைக்கு முன்னரே வெளியிடப்பட்ட சம்பவம்  தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இதற்குரிய நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
இப்பாடத்திற்கான வினாப்பத்திரத்தை  பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் தனது நெருங்கிய மாணவர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் பகுதி 2 ற்கான வினாப்பத்திரத்தில் வந்திருந்த சில வினாக்கள் மேலதிக வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒருவரினால் வழங்கப்பட்ட ​கையேட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தன.  


குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணயை ஆரம்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார பொலிசாரிடம் எழுத்து மூலம்​ கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயனவியல் பகுதி ii இற்கான வினாப் பத்திரத்தின் சில வினாக்கள் ஏற்கனவே தனது மேலதிக வகுப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறி, மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மண்டபம் ஒன்றிற்கு அருகில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளார்.

இது சட்டவிரோதமான செயல் என்றும் இது தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் பின்னர் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்