மருதமுனை, பெரியநீலாவணை பிரதேசங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை, பெரியநீலாவணை பிரதேசங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவான நிதி ஒதுக்கீடு மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு என்பவற்றின் மூலம் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (11) வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி தலைமையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, சமூர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  


இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும்வகையில் தையல் இயந்திரம், மீன் வியாபாரத்திற்கான துவிச்சக்கர வண்டிகள், இடியப்ப உற்பத்தி உபகரணங்கள், நெசவுத் தொழில் சார் உபகரணங்கள், விற்பனை பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான கண்ணாடி அலுமாரி, தராசு போன்ற பல்வேறுபட்ட உபகரணங்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.