தமிழ் மக்களை பொறுத்தவரை அனுபவ ரீதியாக கற்றுக் கொண்ட பாடங்களை கொண்டு இந்த ஆட்சிகளை சொல்லாட்சியாகவே கருத வேண்டியுள்ளது.

(வாழைச்சேனை நிருபர்)
மத்தியிலும்  மாகாணத்திலும் ஆட்சி அதிகாரங்களை கொண்டுள்ளவர்கள்  தங்கள் ஆட்சியை நல்லாட்சி என தங்களுக்குள் புகழாரம் சூட்டிக் கொண்டாலும் தமிழ் மக்களை பொறுத்தவரை அனுபவ ரீதியாக கற்றுக் கொண்ட பாடங்களை கொண்டு  இந்த ஆட்சிகளை சொல்லாட்சியாகவே கருத வேண்டியுள்ளது.

என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்னார்.

மட்டக்களப்பு பன்குடாவெளி  விவேகானந்தா முன்பள்ளி விளையாட்டு விழாவில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும்  உரையாற்றிய அவர்

'' ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பிலிருந்து வீட்டு சூழலுக்கு வெளியே முதலில் கிடைப்பது முன்  பள்ளி ஆசிரியையின் அன்பும் அரவணைப்பும்  ஆகும்.  அந்த  குழந்தை கல்வியில் முன்னேற்றமடைவதற்கு அடித்தளமாக அமைவதும் முன் பள்ளி ஆகும். குறைந்த வருமானத்தில் அர்ப்பணிப்புடன் நிறைவான சேவையாற்றுபவர்களில்  முன் பள்ளி ஆசிரியைகள் தான் முன்னிலை வகிக்கின்றார்கள்   என்பதை நாம் மறந்து விட முடியாது.


முன் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்பிப்பவர்கள் பெண்களாகவே இருக்க வேண்டும் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாகத் தான் உலகில் எங்கு பார்த்தாலும் முன் பள்ளி ஆசிரியைகளாக பெண்களே பணியாற்றுகின்றார்கள். அந்த ஆசிரியையை தாயாகவே சமூகம் கருதுகின்றது.

கிழக்கு மாகாண சபை நிதி  நெருக்கடிகளுக்கு  மத்தியில் முன் பள்ளி ஆசிரியைகளுக்கு மாதமொன்றுக்கு 3000 ரூபா கொடுப்பணவு வழங்கி வந்தது. அக் கொடுப்பணவு சில மாதங்களாக கிடைக்கவில்லை என அறியும் போது  வேதனையாக இருக்கின்றது.மத்திய ஆட்சியிலும் மாகாண ஆட்சியிலும் தமிழ் மக்களை பொறுத்தவரை ஏமாற்றப்பட்டதாகவே உணருகின்றார்கள். இதனை மறுப்பதற்கு இல்லை.

தமிழ் மக்களை வழிநடத்தும் தமிழ் தலைமைகள் எம்மக்களின் கருத்துக்களுக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து செயல்படாவிட்டால் தமிழ் மக்களுக்கும் தலை மைக்குமிடையில்  அரசியல் ரீதியான இடைவெளி ஏற்படுவது தவிர்க்க முடியாதாகிவிடும். வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.

தற்போதைய மத்திய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு ஓத்துழைப்பு வழங்கினாலும் மாகாண சபை ஆட்சியில் இருந்தாலும் சகலவற்றையும் ஆதரிக்க வேண்டும் என்றோ அல்லது பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்ட கூடாது என்றோ எவரும் எதிர்பார்க்க முடியாது.  எந்த இனமாக இருந்தாலும் புறக்கணிக்கப்பட கூடாது. அந்த இனத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

நல்லாட்சி என கூறப்படுகின் தற்போதைய மத்திய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஏதேவொரு வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவாக இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியில் இருந்தாலும்  நல்லிணக்கத்துடன் ஓத்துழைப்புகளை வழங்கி வந்தாலும் தமிழ் மக்கள் எதிர்பார்த்தவாறு  அதன் செயல்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை.

கிழக்கு மாகாண சபையின் தற்போதய பதவிக் காலம் அடுத்த மாதம் 8ம் திகதியுடன் முடிவடைகின்றது. மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழ் வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற வேண்டும் ஆனால் தற்போது அரசியலமைப்பு 20வது திருத்தத்தை கொண்டு வந்து ஜனநாயகத்திற்கு விரோதமாக பதவிக் காலத்தை நீடிக்க அரசு முற்படுகின்றது. ஆனால் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.  தேர்தல் நடைபெறும் போது  தமிழ் மக்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரு மித்து  செயல்பட வேண்டும் ' என்றும் அவர்  தனது உரையில் குறிப்பிட்டார்