முன்பெல்லாம் அரசாங்கங்கள் மறுத்த விடயங்களை தற்போது ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கின்றோம் - கி. துரைராசசிங்கம்


 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேசமே தலையிட வேண்டாம் என கூறினார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் சர்வதேசம் தலையிட்டது. நீதிவிசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணையார்கள் இருக்க கூடாது என்றார்கள் தற்போது அவற்றை நாங்கள் செய்துள்ளோம். முன்பெல்லாம் அரசாங்கங்கள் மறுத்த விடயங்களை தற்போது ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரேமதாஸ மற்றும் சந்திரிகா ஆட்சிக் காலத்தில் சில நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 18 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல்போன 62 பேரின் 27 ம் ஆண்டு நினைவுகூரும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது பிரதேசங்களில் இடம்பெற்ற அழிவுகளைப் பார்க்கின்றபோது தற்போது உயிரோடு இருப்பவர்கள் பல கண்டங்களைக் கடந்தவர்களாக காணப்படுகின்றோம்.

நான் கூட மூன்று முறை கண்டங்களை கடந்துள்ளேன். இராணுவத்தினரிடமிருந்து இரண்டு முறையும் இயக்க நண்பரிடமிருந்து ஒரு முறையும் தப்பியுள்ளேன். இவ்வாறு தப்பாமல் இருந்திருந்தால் என்னுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் எனது புகைப்படத்தை ஏந்தி நின்றிருப்பர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயரில் என்னுடைய பெயரும் சேர்க்கப்பட்டிருக்கும்.

நான் முதன் முதலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதும் இராணுவத்தினரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக செயற்படுவதுதான் எனது முழு வேலையாக இருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எங்களுக்கு தொலைபேசிகள் வரும் உடனடியாக நடவடிக்கையெடுத்து பலபேரை விடுவித்துள்ளளோம்.

அந்த காலத்தில் எமது மக்கள்  இராணுவத்தினரைப் பார்த்து பயப்படவில்லை அவர்களுடன் இணைந்து செயற்பட்ட எமது சகோதரர்களைப் பார்த்துத்தான் பயப்பட்டார்கள்.

எமது பிள்ளைகளை வெறுமனே இராணுவம் பிடித்துக்கொண்டு செல்லவில்லை. இராணுவத்தினருடன் இணைந்து வரும் முண்டங்கள்தான் எமது பிள்ளைகளை எல்லாம் காட்டிக்கொடுத்தவர்கள். எமது பிள்ளைகளைக் காட்டிக்கொடுத்த முண்டங்கள் தற்பொழுதும் எங்களுடன் திரிகின்றன.
இராணுவத்தினால் கொல்லப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறுகின்ற விடயங்களிலே கூடுதலாகச் சம்மந்தப்பட்டிருப்பவர்கள் எங்களுடைய ரத்தத்தின் ரத்தங்களே.

இராணுவத்தினருக்கு எல்லோரும் தமிழர்களே அவர்கள் தமிழர்களை முற்றாக சுட்டு அழிப்பதற்கு வரவில்லை. அவர்களது அகராதியில் பயங்கரவாதிகள் என எழுதப்பட்டவர்களை அழிப்பதற்கு இங்கு வந்தார்கள் அந்த பயங்கரவாதிகள் யாரால் என்பதைக் காட்டிக்கொடுத்தவர்கள் எங்களுடைய சகோதரர்கள் தான்.

கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து அழைத்துச் செல்லபட்டு காணாமல் ஆக்கப்பட்டவரகளின் நினைவு தினம் வருகிறது. அங்கும் இந்த முண்டங்கள்தான் காட்டிக்கொடுத்தன.

1995 சித்தாண்டி ஆலயத்தில் மயல்கட்டுத் திருவிழா நடந்துகொண்டிருந்த வேளை அங்க புலிகள் வந்ததாக கூறி இராணுவத்தினரை அழைத்து வந்தவர்கள் யார் என அனைவருக்கும் தெரியும். ஆலயத்தினும் சப்பாத்துக் காலுடன் வந்ததுமில்லாமல் கோபுரத்தின் மீதும் ஏறினார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரேமதாஸ மற்றும் சந்திரிகா ஆட்சிக் காலத்தில் சில நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 18 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே இருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெற வேண்டுமானல் இது இலங்கையில் நடைபெற வேண்டும் இலங்கை நீதிபதிகளைக் கொண்டு நடைபெற வேண்டும் இதிலே சர்வதேசத்தின் தலையீடு இருக்க கூடாது என அரசாங்கம் கூறிவந்தது.

ஆனால் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் நடைபெற வேண்டும். அந்த விசாரணைகள் இலங்கை நீதிபதிகளைக் கொண்டுதான நடைபெறும் ஆனால் சர்வதேச நீதியாளர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சரா பொறுப்பேற்றுள்ள திலக் மாறப்பன கூறியுள்ளார்.

ஒரு படி முன்னேற்றமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேசமே தலையிட வேண்டாம் என கூறினார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் சர்வதேசம் தலையிட்டது. நீதிவிசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணையார்கள் இருக்க கூடாது என்றார்கள் அதையும் நாங்கள் செய்துள்ளோம்.

சம்பந்தன் ஐயா மௌனம் காத்துவருகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுமே செய்வில்லை என பலர் பிரசாரம் செய்து வருகிறார்கள். மிகவும் நிதானமாக பக்குவமாக இந்த காரியங்களை மேற்கொள்ள வேண்டும். எண்ணெய் ஊற்றப்பட்ட தரையில் ஒரு தாய் தனது கைக்குழந்தையை ஏந்திக் கொண்டு எந்தளவு நிதானத்துடன் நடந்து செல்ல வேண்டுமோ அந்தளவு நிதானத்தோடு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்கின்றது. நிதானம் சற்று தவறினாலும் தாயும் விழுந்து குழந்தையும் விழ வேண்டி ஏற்படும். எனவே இவ்விடயங்களை மக்கள் பரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.