ஸ்வர்ண கால பைரவ வேள்வி உணர்த்தும் உண்மைகள்

[ ரவிப்ரியா ]
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கொல்லிமலை சித்தர் மஹா பைரவ உபாசகர், காக புசுண்டர் தருமலிங்கம் சுவாமிகள் தலைமையில் கிழக்கில் வரலாறு காணாத ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வி வியாழன் வெள்ளி தினங்களில் பக்திபூர்வமாக
நடைபெற்றது.

யுத்தத்தின் பின் கிழக்கில் ஒரு ஆலயத்தில் அதிகூடிய பக்தர்கள் கூடிய இடமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் (ஆலயத்திலிருந்து அடிமைப்படுத்த முனைந்த வெள்ளையர்களை ஆன்மீக பலத்தால், அற்புதத்தால் விரட்டியடித்த பெருமைக்குரிய ஆலயம்.) பதிவு பெறுகின்றது.

அந்தளவிற்கு ஆலய வளாகத்தின் எண் திசையும் எள் கூட கீழே விழ முயாதவாறு பக்தர்கள் நெருக்கமாக நின்று அரோஹரா கோஷம் எழுப்ப புகை மண்டலம் கிழம்ப வேள்வி நடைபெற்றது.

வேள்விக்கான விளக்கங்கள் பக்தர்களின் நம்பிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்ததுடன், இறை  வேண்டுதல்களும் தமிழிலேயே நடைபெற்றது சிறப்பம்சமாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உயிர் உடமைகளை இழந்த பாரிய படுவான் கரை பிரதேச மக்களுக்கு இது ஒத்தடம் போடும் உன்னத நிகழ்வாக அமைந்தது. தங்கள் உறவுகள் உயிரோடு இருக்கிறதா இல்லையா என்ற ஆதங்கத்தில் இருக்கும் உறவுகளுக்கும் ஆறுதல் அளிக்கும் வேள்வியாக அமைந்தது.

அகலா மரணமடைந்த தங்கள் உறவுகளின் ஆத்ம சாந்திக்கு ஆவன செய்யவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த மக்களுக்கும் ஒட்டுமொத்தமாக நடைபெறும் இந்த வேள்வி ஆத்ம திருப்தி அளிப்பதாக இருந்தது.

தீராத நோய்களால் அல்லலுறும் நோயாளிகளுக்கும் ஒரு நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக அருகிவரும் கடவுள் நம்பிக்கையை அகற்றி கடவுள் நம்பிக்கையை  உறுதிப்படுத்தும் ஒரு வேள்வியாகவும் அமைந்தது. கூடிய கூட்டம் அதற்குச் சான்றாக அமைந்தது.

நாதியற்று நடுத் தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்ற. ஏனைய சமூகங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற  தமிழ் சமூகத்திற்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கின்ற ஆன்மீக வழியால் எதையும் அடையலாம் என்ற பொருத்தமான வழிகாட்டலைச் செய்யும் வேள்வியாகவும் இது அமைந்தது.

களைத்துச் சலித்துப்போய் இருக்கின்ற மக்களின் கவலையை இந்த  வேள்வி நிரந்தரமாக நீக்;கும் என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.

இந்தளவு கூட்டம் எப்படி கூடியது என்ற வியப்பை எமக்கு ஏற்படுத்தி எமக்குள் வினாக்களும் உருவெடுத்தது. அதற்கான விடைகளாக எமக்குள் உதித்ததை இங்கு பதிவு செய்கின்றோம்.
மக்களுக்கு நீதித்துறையிலும், அரசாட்சிகளிலும் நம்பிக்கை தளர்ந்துவிட்டது.
நல்லகாலம் பிறக்குது. நல்ல காலம் பிறக்குது என்று குடுகுடுப்பைக்காரன் போல் கூறிக்கொண்டே  இருக்கும் அரசியல்வாதிகளிலும் அவநம்பிக்கை வளர்ந்து கொண்டே செல்கின்றது.

மலைபோல் நம்பியிருந்த ஆயுதப் போராட்டமும், சரிவராமல் போய்விட்டது. எனவே தந்தை செல்வா தீர்க்கதரிசனமாக கூறியதுபோல் கடவுள்தான் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் துளிர்விடத் தொடங்கிவிட்டது.

அதன் வெளிப்பாடாகவே இந்த வேள்விக்கு மக்கள் வெள்ளம் பெருகியது. ஆந்த வேள்வியானத தமிழ் மக்களுக்கு அமைதியைக் கொடுப்பதுடன் சிங்கள மக்களிடமும் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.