இறுதித் தீர்மானம் எடுக்க தேசிய பொருளாதார சபை

அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்கு தேசிய பொருளாதார சபை அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், இவற்றின் செயலாளர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரைக் கொண்டதாக இந்த சபை அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளும் கொண்டிருக்கும் வேறுபட்ட பொருளாதார நிலைப்பாடுகளை ஆராய்ந்து நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டமாகக் கொண்டுவரும் நோக்கில் இந்த சபை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கி அரைவாசியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். 2020ஆம் ஆண்டுவரை அரசாங்கம் தொடரும். இரண்டு வருட காலத்தில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.


எதிர்வரும் காலத்தில் பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கும், அரசின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கும் இந்த சபை அமைக்கப்பட்டிருப்பதாக சு.க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

இந்த சபைக்கு துறைசார் நிபுணர்களின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்படும்.

பொருளாதார செயற்பாடுகள் குறித்த கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதாக இக்குழு அமைந்திருக்கும். எனவே அரசாங்கத்தின் நம்பிக்கைத் தன்மை தொடர்பாக எழும் தேவையற்ற சந்தேகங்களை நீக்கமுடியும்.

"அமைச்சரவையில் எடுக்கப்படும் சில தீர்மானங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் விமர்சிக்கும் நிலைப்பாடொன்று காணப்படுகிறது. அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து கூட்டுப்பொறுப்பு உள்ளது" என்றார். அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து சகலருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது என்றார்.

இரண்டு பிரதான கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவை.

இக்கொள்கைகளுக்கிடையில் இணக்கப்பாட்டை எட்டி பொருளாதார விவகாரங்கள் பற்றிய முடிவை இந்த சபை எடுக்கும். இது தொடர்பில் வர்த்தக சமூகத்தினருக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.