தமிழர் போராட்டத்துக்கு வலு சேர்த்த காரைதீவு மண்ணில் இருந்து மாகாண சபை உறுப்பினர் தெரிவாதல் வேண்டும்! - விபுலாநந்தர் விழாவில் இரா. துரைரட்ணம் -



பல வலிகளையும் சுமந்து தமிழர்களின் உரிமை போராட்டத்துக்கு வலிமை சேர்த்த காரைதீவு மண்ணில் இருந்து உண்மையான தமிழ் உணர்வாளர் ஒருவரை கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுவாமி விபுலாநந்தர் மீது ஆணையாக இவ்வூர் மக்கள் திடசங்கற்ப சபதம் எடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா. துரைரட்ணம் கோரினார்.
சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது ஜனன வருட நிகழ்வாக காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பால் நிர்மாணிக்கப்பட்ட திருவுருவ சிலையை காரைதீவு பிரதேச சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கின்ற வைபவம் கடந்த சனிக்கிழமை மாலை காரைதீவு சண்முகா கலாலயத்தில் வெகுகோலாகலமாக இடம்பெற்றது.
புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும்இ காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தலைமையில் இடம்பெற்ற விழாவில் பேராளராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே துரைரட்ணம் இவ்வாறு பேசினார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
காரைதீவு வீரமும்இ விவேகமும் நிறைந்த மண். சுவாமி விபுலாநந்தர் அடங்கலாக ஏராளமான அறிஞர்களையும்இ பெரியோர்களையும், சான்றோர்களையும்இ துறை சார்ந்த நிபுணர்களையும் காரைதீவு மண் தந்து உள்ளது. எல்லா வளங்களையும் கொண்டு உள்ள இம்மண் அனைத்து வகையிலும் தன்னிறைவு அடைந்து விளங்குகின்றது. தமிழின உரிமைக்காகவும்இ விடுதலைக்காகவும் அளப்பரிய அர்ப்பணிப்புகள்இ தியாகங்கள், சேவைகள் ஆகியவற்றை இம்மண் செய்து உள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல இந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமே கலை, கல்விஇ கலாசாரம், பண்பாடு, அறிவியல்இ ஆன்மீகம், நாகரிகம் என்று அனைத்து துறைகளிலுமே முன்னுதாரணமாக மிளிர்ந்து வருகின்றது. இப்படிப்பட்ட மேன்மை தாங்கிய மண்ணில் இருந்து ஏன் அரசியல் தலைவர்கள் உருவாக கூடாது? இவ்வருட இறுதியில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட கூடிய வாய்ப்பு தெரிகினறது. காரைதீவு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக கோலோச்சிய செல்லையா இராசையா போன்ற மிக பொருத்தமான ஒருவரை ஏன் கிழக்கு மாகாண சபைக்கு அனுப்ப கூடாது? அம்பாறை மாவட்டத்தில் இருந்து மூன்று தமிழர்கள் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாக முடியும் என்றால் அதில் ஒருவரை ஏன் காரைதீவில் இருந்து நீங்கள் அனுப்ப முடியாது? என்று சிந்தியுங்கள். இது உங்களால் முடியும். அதை செய்து காட்டுங்கள்.