நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை பொதுமக்கள் தங்களின் கழிவுகளை மீள் முகாமை செய்யுங்கள் - வெ.தவராசா

(க.விஜயரெத்தினம் )

மட்டக்களப்பு மாநகரசபையின் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்களினால் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவோரங்களிலும், அரச, தனியார் காணிகளிலும், பொதுவிடங்களிலும் வீசவேண்டாம்.எதிர்வரும் 14ம் திகதி நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை தங்களின் திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வெ.தவராசா கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் திண்மக் கழிவு அகற்றாமை, மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல்  திங்கட்கிழமை(11.9.2017)  பி.ப. 3.00 மணியளவில் மட்டக்களப்பு மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வெ.தவராசா,பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், பொறியியலாளர் த.தேவதீபன்,மற்றும் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; மட்டக்களப்பு மாநகரசபையானது 1935 ஆண்டு திருப்பெருந்துறையில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் மாநகரத்துக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக முகாமைத்துவம் செய்து அகற்றி வந்தது. சுமார் அறுபது, எழுபது ஆண்டுகளாக இந்த திண்மக்கழிவகற்றலை தொடர்ச்சியாக செய்து வந்தது. இதனை நாளாந்தம் உக்கக்கூடிய, உக்கமுடியாத வகையில் தரம்பிரித்து செய்து வருகின்றோம்.

 மட்டக்களப்பு மாநகரத்துக்குள் அமைந்துள்ள 29442 குடும்பங்கள் மூலமும்,ஏனைய நிறுவனங்கள் மூலமும் தினசரி(நாளாந்தம்) 90 டொன் குப்பைகள்  சேருகின்றது. இவற்றில் 70 டொன் எங்களுடைய மாநகரசபை ஊழியர்களைக் கொண்டு அகற்றி வருகின்றோம். இவற்றில்தற்போது உக்கக்கூடிய கழிவுகள் 23 டொன் ஆகும்.இவை திருப்பெருந்துறையில் உள்ள சேதனைப்பசளை தயாரிக்கும் நிலையத்தில் உரம் தயாரித்தலுக்காக பயன்படுத்தப்படுவதுடன் உரம் தயாரித்தல் தனித்த செயற்பாடாக அமைகின்றது.

ஏனைய 46 டொன் கழிவுகள் உக்காத கழிவுகளாகவும்,கலப்புக்கழிவுகளாகவும் அகற்றப்பட்டு திருப்பெருந்துறை நிலப்பரப்புத் தளத்தில் கொட்டப்படுகின்றது.ஏனைய 1.5 டொன் கழிவுகள் பிளாஸ்டிக், காட்போட் கழிவுகளாக சேகரிக்கப்பட்டு அவை மீள்சுழற்ச்சி நிலையத்தின் மூலம் சந்தையில் விற்கப்படுகின்றது.  மீதி 20 டொன் குப்பைகளை பொதுமக்கள் முகாமைத்துவம் செய்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் இருக்கின்ற வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பொலீஸ் நிலையங்கள், நீதிமன்ற வளாகம், சிறைச்சாலை (தினமும் 1 லோட்), போதனா வைத்தியசாலை (தினமும் 1 லொறி லோட்), பொதுச்சந்தைகள் (ஒரு லோட்), விலங்கறுமனை என்பனவற்றில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வேலைத்தள மேற்பார்வையாளர்களின் வழிகாட்டல்களுடன் கிரமமாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுகின்றது. மாநகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 252 இன் மூலம் கழிவகற்றல் மாநகரசபைக்களிக்கப்பட்ட கடமையாக காணப்படுவதுடன், 2015/53 என்ற 2017 ஏப்ரல் 20 ஆம் திகதிய அதிவிஷேட வர்த்தகமானி அறிவித்தல் மூலம் அத்தியாவசிய சேவையாக திண்மக்கழிவு முகிமைத்துவம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் போது கடந்த 22.8.2017 அன்று இரவு அதிகாலை ஒரு மணியளவில்  இனந்தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டது. இதனை முப்படைகள், மாநகர தீயணைப்பு படையணி, உள்ளூர் திணைக்களம், பொலநறுவை, திருகோணமலை, கல்முனை போன்றவற்றில் உள்ள மாநகரசபைகளின் தீயணைப்பு படையணிகள்,  மனிதவளம், இயந்திர வளம் உதவியுடனும் 75 வீதம் தீயணைப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். இதனால் மாநகர கழிவகற்றலில் பாரிய பிரச்சனை தோன்றியது.

இதன் பிற்பாடு மீண்டும் 25 .8.2017 மீண்டும் தீ மூட்டப்பட்டது. இதனால் மாநகரம் பூராகவும் திண்ம கழிவகற்றல் பிரச்சனை பாரிய பிரச்சனையாக தோன்றியுள்ளது. தனிப்பட்டவர்களின் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் தீர்வு சொல்ல முடியாமல் போனது. சேகரிக்கப்படும் கழிவுகளை கொண்டு கொட்டப்படும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் மக்களால்  இது சம்பந்தமாக மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. இத்தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்றுவரையும் மாநகர எல்லைக்குள் எங்கள் மாநகரசபையால் திண்மக்கழிவகற்றல் செய்யவில்லை.

 சட்டரீதியான நடவடிக்கைக்கு வழக்கு தொடரப்பட்டது. எதிர்வரும் 14 திகதி தீர்ப்பு கிடைக்கும் வரை மாநகர பொதுமக்கள் தங்களின் திண்மக்களிவுகளை நீங்களே முகாமை செய்யுங்கள். அப்படி செய்யாமல் தங்களின் வீட்டுக்கழிவுகளையும், கடைகளின் கழிவுகளையும், குறித்த இடத்திலிருந்து உரப்பைக்குள் இட்டு அதனை எடுத்துக்கொண்டு சூட்சுமமான முறையில் வீதிகளிலும், பொது இடங்களிலும், கடல் ஆறுகளிலும், தனியார் அரச காணிகளிலும் வீச வேண்டாம். அவ்வாறு வீசுபவர்களை கையும் மெய்யுமாக பொதுமக்கள் அல்லது நாங்கள் பிடித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே பொதுமக்கள் தங்களின் கழிவுகளை மீள் முகாமை செய்யுங்கள். மட்டக்களப்பு நகரில் இருந்து 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொடுவாமடு நிரநிரப்புத்தளம் செங்கலடி-ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்டது. Unops நிறுவனத்தினால் 98 மில்லியன் ரூபா நிதியில் உருவாக்கப்பட்ட இந்த நிலநிரப்புத்தளத்தினை பயன்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாநகரசபையும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது 8 உள்ளுராட்சி மன்றங்கள் பயன்படுத்துவதற்கு கொத்தணி முறையிலான நிலநிரப்புத்தளமாகும்.

இங்கு உக்கக்கூடிய கழிவுகளையும்,உக்கக்கூடியது உக்காதது கலந்த-கலப்புக்கழிவுகளையும், மீள்சுழற்ச்சிக் கழிவுகளை (பிளாஸ்டிக்,காட்போட்,போத்தல்) போன்ற கழிவுகளை கொண்டு செல்லமுடியாது. இறுதிக் கழிவுகளை உக்காத கழிவுகளையே இங்கு கொட்டமுடியும். கொடுவாமடுப் பிரதேசத்திற்கு கழிவுகளை அனுப்புவதால் பல்வேறு சாவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அங்கு கொட்டப்படும் ஒவ்வொரு டொன்னுக்கும் 380 ரூபா வீதம் செலுத்த வேண்டும். கொட்டப்படும் கழிவுகளை மூடுவதற்கான மண்ணை எமது சபை நிதியிலிருந்தே வழங்கவேண்டும். கழிவுகளை கொண்டு செல்லுதல் மீண்டும் வருவதற்கான தூரம் 32கிலோமீற்றராகும். பிரதான வீதியினூடாக போக்குவரத்து செய்யவேண்டியுள்ளதால் கொம்பெக்டர் வாகனம் மூலமே கழிவுகளை கொண்டு செல்லலாம்.

 கொடுவாமடுவில் உக்கமுடியாத கழிவுகளை மட்டும்தான் கொண்டு சென்று அகற்ற முடியும். மாநகரத்துக்குள் உக்கமுடியாத கழிவுகள் சேருவது மிகமிகக்குறைவு. எங்களுக்கு திருப்பெருந்துறை இடத்தைதவிர திண்மகழிவகற்றலுக்கு ஏற்ற இடம் மட்டக்களப்பு  மாவட்டத்தில் வேறு இல்லை. இது சம்பந்தமாக நானும், எமது மாநகர பொறியியலாளர், சுற்றாடல் அதிகாரிகள் போன்றோர்கள் எமது மாநகர சபைக்கு அப்பாலும் சென்று தேடிக்கொண்டிருக்கின்றோம்.

இறுதியாக உன்னிச்சை பிரதேசத்திற்கு மேலே உள்ள காட்டுக்குள் ஒரு இடத்தை தெரிவு செய்தோம்.ஆனால் அது பொருத்தமான இடமல்ல. ஏன்னென்றால் யானைகள் வரும்வழியாகும். இந்த குப்பைகளையும், உணவுக்கழிவுகளையும் யானைகள் சாப்பிட்டு அதன் ருசியை ருசித்து நுகரும்போது யானைகள் யாவும் மக்களின் இருப்பிடங்களை நாடிவரும்.

எனவே அதுவும் பொருத்தமான இடமல்ல. உன்னிச்சைக்கு மேல் குப்பைகளை அகற்றும்போது மாநகரத்துக்குள் சேகரிக்கப்படும் கால்பகுதி குப்பைகளை மட்டும்தான் அகற்ற முடியும். எனவே நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை பொதுமக்கள் தங்களின் குப்பைகளை மதிநுட்பத்துடன் முகாமை செய்யுங்கள்.

திருப்பெருந்துறை குடியேறியுள்ள பொதுமக்கள் இவ்விடத்தை குப்பை கொட்டுவதற்கு அனுமதிக்காமல் சந்துருக்கொண்டான், திராய்மடுவில் போன்றவற்றுக்கு கொண்டுபோய் திண்மகழிவகற்றலை செய்யுங்கள் என தெரிவிக்கின்றார்கள். திராய்மடு சத்துருக்கொண்டானில் திண்மக்கழிவகற்றலுக்குரிய மண்வளம், கடல் மட்டத்திலிருந்து ஐந்தடி உயரம் இருத்தல் வேண்டும். மண்ணானது கடினமான, கிறவல் மண் அமைப்பாக இருக்க வேண்டும்.இவை சத்துருக்கொண்டான்,திராய்மடு பிரதேசத்தில் இல்லாதால் அவ்விடம் பொருத்தமல்ல. குப்பைகளிலிருந்து வரும் கழிவுநீரானது (இவ்விடத்தை தெரிவுசெய்து நடைமுறைப்படுத்தினால்) அங்குள்ள  நிலக்கீழ் குடிநீர், மண்ணுடன் சேர்ந்து சூழல் மாசடைந்து பிரதேசத்தில் குடிநீர் கிணறுகளுடன் ஊடுருவி கிணறுகளையும் மாசடையச்செய்யும். இதனால் பிரதேசத்தில் குடிநீர்  பிரச்சனை தோன்றும்.

எனவே பொதுமகள் சூழலுக்கு பாதிக்காத வகையில் பொலீத்தீன், லஞ்சீற், பிளாஸ்ரிக் பொருட்களை தவித்து கொள்வனவு செய்யுங்கள். தனியொருவராலோ, அல்லது மாநாகரசபையாலோ முற்றுமுழுதாக சூழலை பாதுகாக்க முடியாது. மட்டக்களப்பு மாநகரசபை மக்கள் பங்காளிகளாக மாறி விழிப்புடன் செயற்பட்டு குப்பைகளை மீள்முகாமை செய்யுங்கள்.

இந்தமாதம் 14ம் திகதி நல்லதொரு தீர்வு கிடைக்கும். அதுவரையும் பொறுமையாக இருந்து குப்பைகளை தெருவோரங்களில் வீசாமல் மீள்சுழற்ச்சி முகாமை செய்து மாநகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் எனத்தெரிவித்தார்.