மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; நோயாளர்கள் பெரும் அவதி

மாலபே "சைற்றம்" தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் நேற்று (12) மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தினால் வடக்கு, கிழக்கு உட்பட அநேக ஆஸ்பத்திரிகள் செயலிழந்ததோடு நோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையிலான ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(12) முதல் எதிர்வரும் (15) வரை மாவட்டங்கள் தோறும் ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா ஹம்பாந்தோட்டை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் நேற்று அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது.

வவுனியா, மாத்தளை, அம்பாறை, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளன.

அனுராதபுரம், குருநாகல், கண்டி, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் நாளை (14) இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

அதேவேளை புத்தளம், கம்பஹா, கேகாலை, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் (15) வேலை நிறுத்தம் இடம் பெற உள்ளது.

நேற்றைய அடையாள வேலை நிறுத்தத்தினால் வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயலிழந்ததாக அறிவிக்கப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் நேற்று இயங்கியதாக தெரிய வருகிறது.

சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பியதோடு வேலை நிறுத்தம் அநீதியானது எனவும் தமது விசனத்தை வெ ளியிட்டனர்.

இதே வேளை சைற்றம் தனியார் மருத்துவமனைக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டன. கினிகத்ஹேன, திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திஸ்ஸமகாராம ஆகிய பகுதிகளில் இருந்து ஆரம்பமான இந்த பேரணிகள் (15) கொழும்பை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சைற்றத்திற்கு எதிரான போராட்டத்தை அரசாங்கம் பொருட்படுத்தாமல் மக்களுக்கு இறுதி தீர்வொன்றை வழங்குவதை தொடர்ந்தும் தாமதித்தால் அடுத்த வாரம் ஒன்றிணைந்த வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ளப் போவதாக மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது. 21 ஆம் திகதிக்குப் பின்னர் பாரிய மருத்துவ வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவர் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று(12) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வௌியிட்ட சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே,

வேலை நிறுத்தத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கான பொறுப்பை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.