மியன்மார் நாட்டில் ரோகிங்கிய முஸ்லிம்கள் அழிக்கப்படுவதை கண்டித்து மருதமுனையில் ஆர்ப்பாட்டம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மியன்மார் நாட்டில் ரோகிங்கிய முஸ்லிம்கள் அழிக்கப்படுவதை கண்டித்து மருதமுனை மக்கள் ஏற்பாடு செய்த கண்டன ஆர்பாட்டம்  (08.09.2017) ஜூம் ஆ தொழுகையின் பின்னர் மருதமுனை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசல் முன்னால் நடைபெற்றது இங்கு உரையாற்றும் போதே விரிவுரையாளர் இவ்வாறு தெரிவித்தாா் தொடர்ந்து உரையாற்றும்  போது,

மியன்மாரில் ராக்கைன் மாநிலத்தில் இராணுவத்தினரால் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை மருதமுனை மக்கள் வன்மையாகக் கண்டிப்பதாக மருதமுனை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அன்ஸார் பளீல் மௌலானா (நளீமி) விரிவுரையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


2016 ஒக்டோபரிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வெறியாட்டங்களால் இதுவரை 3,000 கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்திருக்கும் அதே வேளை சுமார் 135,000 பொது மக்கள் சொந்த இடங்களை விட்டும் வெளியேறி பங்களாதேசிலும் அதன் எல்லைப் புறங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

700க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. கடந்த ஆறு மாதத்திற்கு முன் இலங்கையின் வட பகுதிக் கடற் பரப்பிலும் பல ரோஹிங்ய முஸ்லிம்கள் கரையொதுங்கியதையும் அவர்கள் யாழ் முஸ்லிம் அமைப்புக்களால் பராமரிக்கப்பட்டு வந்த செய்தியையும் இக் கட்டத்தில் நினைவூட்ட விரும்புகின்றோம்.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக இலங்கையிலும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் சூழ்நிலையில் மருதமுனை வாழ் மக்களும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் அதே வேளை மியன்மாரில் நடாத்தப்படும் காட்டு தர்பார் நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென மருதமுனை பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், சிவில் சமூக அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

இதேவேளை இலங்கையில் சில பௌத்த தீவிரவாத குழுக்கள் மியன்மார் போன்ற ஒரு சூழ்நிலையை வேண்டுமென்று தோற்றுவிக்க தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதையிட்டு இலங்கை வாழ்முஸ்லிம்கள் விளிப்புணர்வோடும், அவதானத்தோடும் செயற்பட வேண்டுமென மருதமுனை பொது மக்கள் அன்புடன் வேண்டிக் கொள்கின்றனர்.

இதில் நாம் கூட்டுப் பொறுப்போடு செயற்பட வில்லையென்றால் மியன்மாரை உதாரணங் காட்டி இலங்கை வாழ்முஸ்லிம்களுக்கு எதிராக வலிந்து  வன்முறைகள் உருவாக்கப்பட ஒரு பிழையான முன்மாதிரி தோற்றுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம் என மருதமுனை வாழ் மக்கள் கருதுகின்றனர் என்றாா்.