இந்த அரசாங்கமும் கடன்களைப் பெற்று அவற்றை மக்கள் மீது சுமத்திவருகிறது

கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது வரிச் சுமையை செலுத்தி விட்டே பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

பாரிய திட்டங்களுக்காக கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் கடன்கள் பெறப்பட்டன. இந்த அரசாங்கமும் கடன்களைப் பெற்று அவற்றை மக்கள் மீது சுமத்திவருகிறது என்றார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அநுரகுமார திசாநாயக்க இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மத்திய அதிவேகப் பாதை அமைச்சரவையின் தீர்மானங்களை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தார். தெற்கு அதி வேகப் பாதை, கட்டுநாயக்க அதிவேகப் பாதை என பல்வேறு பாரிய அவிருத்தித் திட்டங்களுக்காக அளவுக்கு மீறிய கடன்களை முன்னாள் அரசும் தற்போதைய அரசும் பெற்றுக்கொண்டுள்ளன இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன்களால் மக்களுக்கு ஏதும் நன்மைகள் ஏற்படவில்லை.

கடன்சுமைகளும் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அதுபற்றி விவாதம் நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.