களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையினால் வீதி விபத்து ஒத்திகை.


(துறையூர் தாஸன்)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்,களுதாவளை மகாவித்தியாலத்துக்கு முன்னாள்,பயணிகளை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் மணல் ஏற்றி வந்த கனரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய ஒத்திகை சம்பவம்,களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை,வைத்திய அத்தியட்சகரின் டாக்டர். கு.சுகுணன் தலைமையில் இன்று(20) இடம்பெற்றது.

விபத்து நிகழ்ந்த கணத்தில் இருந்து விபத்துக்குள்ளானவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் வரையிலான களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸாரின் தார்மிக சேவைகளையும் விபத்துக்குள்ளானவர்களுக்கு விபத்துக்குள்ளானவர்களின் தேவைக்கேற்ப தேவையறிந்து சிகிச்சைகளை மேறக்கொள்ளும் வைத்தியசாலை நிர்வாகம்,வைத்திய நிபுணர்கள்,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,தாதியர்கள்,வாகன சாரதிகள்,சுகாதார உதவியாளர்கள் மற்றும் அரச சாரா உத்தியோகத்தர்கள் ஆகியோரின் சேவைகளையும் தத்ரூபமாக அவதானிக்ககூடியதாகவிருந்தது.

மட்டக்களப்பு கல்முனை வீதியால் பயணித்த பிரயாணிகள் உண்மையான விபத்தே என நம்பி,வீதியில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் என்ன நடந்தது,எப்படி நிகழ்ந்தது,எந்த நேரம் விபத்தானது,போக்குவரத்து சட்ட விதிகளை எந்த வாகனம் மீறியது,சாரதி எவ்வாறான நிலையில் வாகனத்தை ஒட்டினார் என்ற பல்வேறு கேள்விகளை அவ்விடத்தில் வைத்து கேட்டனர்.

பெரும்பாலான போக்குவரத்து பயனாளிகள்,உண்மையாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என்று எண்ணி விபத்துக்குள்ளானவர்களை காப்பற்ற எத்தணித்ததையும் அவர்களுக்கு உதவி செய்ததையும் இதன்போது காணக்கூடியதாக இருந்தது.

இவ்ஒத்திகைச் சம்பவம் பொதுமக்களிடத்து ஒரு விவாதத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.

இயற்கை மற்றும் செயற்கை அனர்த்த முகாமைத்துவத்தின் போது போக்குவரத்து பொலிஸார்,வைத்தியசாலை மருத்துவக் குழுவினர்,சிவில் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியோரின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது இவ் வீதிவிபத்து மூலம் மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.