குச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

திருமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குச்சவெளி இலந்தைகுளம் முஸ்லிம் வித்தியாலத்திற்கான காணிப் பிரச்சினை கடந்த சுனாமிக்கு பின்னர் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். அன்றுமுதல் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இருந்துவந்த காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வரின் முயற்சியினால் நிரந்தர தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், முன்னால் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் மொஹமட்,  பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு குறித்த பாடசாலைக் காணி தொடர்பாக  திருமலையிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் 2017.09.11ஆந்திகதி - திங்கட்கிழமை ஆராயப்பட்டு நிரந்தர தீர்வு பெறப்பட்டுள்ளது.



பாடசாலைக்கான தகுந்த காணியினை ஏலவே வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் விஸ்தீர்ணமுள்ள காணி ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள ஆசிரியர் விடுதிக்குமான காணி பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட பாடசாலைக்கான 3 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்பான்மை இனத்தை சேந்த ஒருவருக்கு சுமார் 80 பேர்ச் காணி இருப்பதாக பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது குறித்த நபருக்கான 80 பேர்ச் காணியினை பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வேறொரு பகுதியில் மாற்று காணியினை வழங்க
இச்சந்தர்ப்பத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இது விடயமாக குறித்த பகுதிக்கான வலயக் கல்விப் பணிப்பாளர் மாகாண காணி ஆணையாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்புமிடத்து அவற்றை பாடசாலைக்கு விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், குச்சவெளி பிரதேச செயலாளர் காணி பயன்பாட்டு குழுவிற்கு சமர்ப்பித்து அவற்றை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் நிரந்தர முடிவாக தீர்மானிக்கப்பட்டது.

அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்தும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டதுடன்,
குறித்த காணி விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.