யாழ். நூலக விழிப்புணர்வு நிறுவகத்தால் கிழக்கு மாகாண நூலகங்களுக்கு பெறுமதிமிக்க நூல்கள் அன்பளிப்பு

யாழ்ப்பாணம் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தால் கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட நூலகங்களுக்கு ஒரு தொகுதி நூல்கள்  புதன்கிழமை (புதன்கிழமை 13ஆம் திகதி பிற்பகல்) அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.



இயற்கை பேரிடர்களாலும் போர் அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட நூலகங்கள் என்ற அடிப்படையில்,  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 14 நூலகங்களும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 06 நூலகங்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 05 நூலகங்களுமாக 25 நூலகங்கள் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டு, ஒரு நூலகத்திற்கு தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதியில் 25 நூலகங்களுக்குமாக 2இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பெறுமதிமிக்க நூல்கள் உரிய நூலகங்களுக்கு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். பொது நூலக ஓய்வுபெற்ற பிரதம நூலகரும் யாழ்ப்பாணம்  நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் செயலாளருமான எஸ்.தனபாலசிங்கம், கிழக்கு மாகாண நூலக இணைப்பாளர் அன்வர் சதாத், மட்டக்களப்பு மாவட்ட நூலக இணைப்பாளர் தி.சரவணபவன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ் மற்றும் நூலகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வாசிப்பு மற்றும் அறிவுத்திறனை மேலும் வளர்க்கும் நோக்குடன் தமது நிறுவகத்தால் வடக்கில் பல சேவையினையும் வேலைத் திட்டங்களையும் தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அச் சேவையினை, அனர்த்தங்களின் தாக்கத்துக்குள்ளான மக்களுக்காக தற்போது  கிழக்கு மாகாணத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளதாகவும் நிறுவகத்தின் செயலாளர்  எஸ்.தனபாலசிங்கம் தெரிவித்தார்.