வாழைச்சேனைப் பிரதேசத்தில் பெண்கள் சுயதொழில் முயற்சி வர்த்தக சந்தை

                                                                          (ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரு கிராம சேவையாளர் பிரிவில் பெண்கள் சுயதொழில் முயற்சி வர்த்தக சந்தை ஒன்று இரு வேறுபட்ட தினங்களில் இடம்பெற்றது. 
 
கடந்த 15ந் திகதி ஆரம்பமாகி, 16ந் திகதி வரை பேத்தாழை பொது மைதானத்திலும், அதனைத் தொடர்ந்து 19, 20 ஆகிய தினங்களில் வாழைச்சேனை பிரதேசசபை பொது மைதானத்திலும் இந் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. இவ் வர்த்தக சந்தையினை அம்கோர் நிறுவனம் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தில் இயங்கும் சுயதொழில் முயற்சி பெண்கள் குழுக்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் சுயதொழில் முயற்சியினை மேம்படுத்தி, சிறு கைத்தொழில் துறையினை விருத்தியடையச் செய்வதன் ஊடாக பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கில் இவ்வர்த்தக சந்தை நடாத்தப்பட்டது. இந் நிகழ்வின் போது சுயமுயற்சி குழுங்களினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பட்ட கண்கவர் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டதுடன் இடையிடையே பல களியாட்ட நிகழ்வுகளும், போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. 

 இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளும், அம்கோர் நிறுவன பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சுயதொழில் முயற்சி குழுக்கள் என பல்வேறுபட்டோர் கலந்துகொண்டனர். இறுதி நாள் நிகழ்வின் போது போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றோருக்காக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.