தமிழ் கிராமங்களை இணைக்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக செங்கலடியில் ஆர்ப்பாட்டம்

ஏறாவூர் நான்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, மீண்டும் ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து செங்கலடியில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியிலிருந்து மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியூடாக பேரணியாகச் சென்ற பொது மக்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இணைக்கப்பட்ட பகுதிகளை மீளவும் எந்தவித மாற்றமும் இன்றி 2016 ஆண்டுக்கு முன்னிருந்தவாறு நிருவகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆர்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீநாத்திடம் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பனர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.