SLEAS நேர்முகப் பரீட்சைக்கு 112 பேர் தகுதி; சிறுபான்மையினர் ஐவர் மட்டுமே..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்புக்கு உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் அதிபர் சேவையின் முதலாம் வகுப்பை சேர்ந்த 112 பேர் சேவைமூப்பு மற்றும் திறமை அடிப்படையில் இந்நேரமுகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கள மொழி மூலம் 107 பேரும் தமிழ் மொழி மூலம் 05 பேரும் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இருந்து தலா ஒருவரும் மலையகத்தில் இருவரும் தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினர் தெரிவாகியுள்ளனர்.


அதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்புக்கு தெரிவு செய்யப்பட்டோருக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நியமனம் வழங்கப்படும் எனவும் அவர்களது பெயர் விபரங்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.