மாற்றுத்திறனாளிகளின் தொழிற்பயிற்சி நிலைய அடிக்கல் வைக்கும் நிகழ்வு!



மட்டு - வாழைச்சேனை கும்புறுமூலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சமூக தேவைகள் பணிப்பாளர்  செல்வநாயகம் தலைமையில் நேற்று (27) நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளரால் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்துக்கான தொழில் பயிற்சிகளை பெற்று அவர்கள் சொந்த காலில் நிற்பதற்காக எட்டு (8) கோடி ரூபாய் சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இப் பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன்  கட்டிட நிர்மாணிப்பு வேலைகள் அனைத்தும் ஒப்பந்த காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த வருட நிறைவுக்குள் குறித்த பயிற்சி நிலைய நிர்மாணிப்பு நிறைவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம், அபிவிருத்தி  உத்தியோகத்தர் கே. ஜெகதீஸ்வரன், கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ் பரமானந்தம், மட்டக்களப்பு சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர், ஏனைய அரச அலுவலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.