ஜனவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்!

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், புதிய தேர்தல் முறைமையின் ஊடாக கிராமங்கள் ரீதியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த முறைமையின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றங்கள் பெரும்பாலானவற்றின் பதவிக் காலங்கள் காலாவதியாகியுள்ள நிலையில், அண்மையில் மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து, உள்ளூராட்சி தேர்தலை விரைந்து நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடி வருவதோடு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் அண்மையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.