தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த அரசு தீர்மானம்

இலங்கையில் அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தீர்ப்பினை சரியாக பெற்றுக் கொள்வதற்காக தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கூறுகின்றது.

"இலங்கையில் 1977ம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட தேர்தல்களில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ரீதியாக அவகாசங்கள் காணப்பட்ட போதும், தற்போதைய தேர்தல் முறை அவ்வாறான விதிமுறைகளை உள்வாங்கவில்லை.


அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், இது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை தொடர்பாக ஆரம்ப இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல் வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கும், அச்செலவுகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஏதுவான முறையில் தற்போது காணப்படுகின்ற தேர்தல் சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் மற்றும் புதிதாக சட்டங்களை விதிப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது." என அமைச்சரவை தீர்மானம் தெரிவிக்கின்றது.