ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை எனவும், புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் இணைத்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் தெரிவித்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நாளை நள்ளிரவு முதல் ரயில்வே சாரதிகள், பாதுகாவலர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் குறித்த தொழிற்சங்கம் திடீரென மேற்கொண்ட போராட்டத்தினால் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.