பட்டிருப்பு கல்வி வலயத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற கல்லாறு றோசாலயாவின் ஆங்கில எழுத்துக்கூட்டற் போட்டி.

[ ரவிப்ரியா ]                 
பட்டிருப்பு கல்வி வலயத்தின் தென் பகதி பாடசாலைகளுக்கான வருடாந்த ஆங்கில எழுத்துக் கூட்டற்போட்டியை கல்லாறு றோசாலயா கலை கலாசார பொது சேவை நிலையம் இம்முறையும் நான்கு கிராமங்களில் வழக்கம்போல் வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.


ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறைநீலாவணை கிராமங்களில் உள்ள பாடசாலைகளை மையப்படுத்தி கழகத்தின் தலைவர் எஸ்.எஸ்.சவுந்தரநாயகம் தலைமையில், இம்மாதம் 7ந் திகதி ஆரம்பித்த போட்டிகள் யாவும் 15ந் திகதியுடன் நிறைவு பெற்றது.

முதலாவது போட்டி பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப் போட்டிக்கான இணை அனுசரணையை கல்லாறு விளையாட்டுக் கழகம் உற்சாகமாக வழங்கியது.

இரண்டாவது போட்டி கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 6, மற்றும் தரம் 7 மாணவர்களுக்கு நடைபெற்றது. இதற்கான இணை அனுசரணையை வழக்கம்போல் சமூக உயர் கல்விச் சேவைகள் சங்கம் (செஸ்) வழங்கியதுடன் மட்டுமல்லாது அதன் அங்கத்தவர்கள்; போட்டி சிறப்பாக இடம்பெற பூரண ஒத்தழைப்பையும் முழுமையாக வழங்கினார்கள்.

மூன்றாவது போட்டி ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 8 மற்றும் தரம் 09 மாணவர்களுக்கு நடைபெற்றது. இதற்கான அனுசரணையை ஓந்தாச்சிமடம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை சிறப்பாக வழங்கியது.

நான்காவது போட்டி துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கு நடைபெற்றது. அதற்கான அனுசரணையை வழக்கம்போல் பாடசாலையின் அதிபர் விடாப்பிடியாக தனிப்பட்ட ரீதியில் வழங்கி வைத்தார்.

முதல் இரு போட்டிகளையும் அவஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த கழகத்தின் அங்கத்தவரும், அவுஸ்திரேலியாவின் தமிழ் வானொலி அறிவிப்பாளருமான த.பிரபாகரன் நடாத்தினார். ஏனைய இரு போட்டிகளையும் வழக்கம் போல் கழகத்தின் தலைவரும், போட்டியை அறிமுகப்படுத்தியவருமான எஸ்.எஸ்.சவுந்தரநாயகம் நடாத்தினார்.

மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். மிகக் குறைந்த புள்ளி வித்தியாசங்களிலேயே வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்பட்டன. 20க்கு20 கிரிக்கற் போட்டியைப் பார்ப்பது உணர்வை தங்களுக்கு ஏற்படுத்தியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துரை வழங்கிய ஆசிரியை ஒருவர் முன்பு தானும் இப்போட்டியில் கலந்து கொண்டதாகவும் தற்போது தனது மாணவர்கள் பங்குபற்றுவதாகவும் தெரிவித்தார். இதே பாணியில் கருத்து தெரிவித்த ஒருவர் தானும் இப் போட்டியில் பங்குபற்றியதாகவும், தற்போது தனது மகன் பங்குபற்றுவதாகவும் தெரிவித்தார்.
எனவே இப்போட்டி பல தசாப்தங்களை தாண்டி இந்த எழுத்துக் கூட்டற் போட்டி எவ்வளவு காலமாக நடைபெற்று வருகின்றது என்பதை ஊகிக்க கூடியதாக இருக்கின்றது.

இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா நவம்பர் 5ந் திகதி நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அன்றைய தினம் தரம்5, மற்றும் தரம்11 அணியினருக்கான இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

வெற்றி பெறும் அணிகளுக்கு அமரர் டாக்டர் எஸ். கனகராஜா (கழக முன்னாள் உபதலைவர்), அமரர் இலங்கை வங்கி முகாமையாளர் கு.அருளானந்தம் (கழக உறுப்பினர்), அமரர் அதிபர் சோதிடர் மா.பேரானந்தம் ;(கழக உறுப்பினர்), தொழிலதிபர் பி.அருணகிரி (கழக உறுப்பினர்) அமரர் ஆங்கில ஆசிரியர் எச்.லூயிஸ், அமரர் அரச ஒப்பந்தக்காரர் எம்.தம்பிராசா , மற்றும் அமரர் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ரி.அழகரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்த கிண்ணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்படும்.

போட்டிகளை ஆரம்பித்து வைத்துப் பேசிய கழகத்தின் தலைவர் எஸ்.எஸ்.சவுந்தரநாயகம் பின்வருமாறு உரையாற்றினார்.
ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை இலங்கை அரசு உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அம்சமாக தரம்2 லிருந்து ஆங்கிலக் கல்வியை முன்னெடுக்க அரசு திட்டமிட்டுவருகின்றது. எனவே ஆங்கில கல்வியின் அவசியம் இலங்கையின் முன்னுரிமை பெற்று வருவது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

மேற்கண்டவாறு ஓய்வுநிலை நிருவாக உத்தியோகத்தரும் றோசாலயாவின் தலைவருமான எஸ்.எஸ்.சவுந்தரநாயகம் தெரிவித்தார். கல்லாறு றோசாலயா கலை கலாசார பொது சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்படும் ஆங்கில எழுத்துக் கூட்டற் போடடியின் தரம் 8,9 மாணவர்களுக்கான போட்டி ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் சனியன்று (14) நடைபெற்ற போட்டிக்கு தலைமை வகித்து பேசும் போது அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

இலங்கையில் சிங்கள மொழியே ஆதிக்கம் செலுத்துகின்ற போதும் ஆங்கில மொழியும் செல்வாக்குச் செலுத்துகின்ற மொழியாகக் காணப்படுகின்றது. எனவே மாணவர்களைப் பொறுத்தவரையில் நவீன கல்விச் சூழலில் இவர்களுக்கு ஆங்கிலக் கல்வி அறிவு அவசியம் என்பதை உணர்ந்து எமது கழகம் பல ஆண்டுகளாக வலய மட்டத்தில் வலயத்தின் தென்பகுதி பாடசாலைகளுக்காக இப் போட்டியை நடாத்தி வருகின்றது. ஆங்கிளக் கல்விக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் உயர்கல்விக்கு உத்தரவாதம் அளிக்கின்ற மொழியாக ஆங்கிலம் நிலைபெற்று வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்போட்டில், தரம் 5ல் பங்குபற்றும் ஒரு மாணவன் தரம் 11வரை இப்போட்டியில் பங்குபற்றினால்., அவன் 1500 ஆங்கிலச் சொற்களை மனனம் செய்தவனாக இருக்கின்றான். ஆங்கில மொழியை எவரும் பேசலாம். ஆனால் எழுதுவதற்கு ஆங்கிலச் சொற்களை பிழையின்றி எழுதும் ஆற்றல் இருக்க வேண்டும்.

அங்கிலத்தில் 2500 சொற்கள் தெரிந்தால் ஆங்கிலத்தை பிழையின்றி எழுத வாசிக்க உரையாட முடியும். எனினும் எமது இந்த போட்டி மூலம் பெற்றுக்கொண்ட ஆங்கிலச் சொற்கள் 1500 மூலம் அவர்கள் சாதாரணமாக ஆங்கில மொழியை நன்கு பரிச்சமான மொழியாக மாற்றிக் கொள்ள முடியும். பயமின்றி எழுத வாசிக்க உரையாட முடியும்.

அதன் முலம் உயர்கல்வியை அச்சமின்றி இலகுவாக மேற்கொள்ளக் கூடிய ஆற்றலை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். உயர்கல்வியின் போது கணணி முலம் நிறையவே தேடுதல்கள் செய்யவேண்டியது தவிர்க்க முடியாத செயற்பாட்டில் ஒன்றாகும். கணணியைக் கையாள்வதற்கும் அதன் மூலம நவீன தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அடிப்படையாக அமைவது ஆங்கிலக் கல்வியே என்பதை மாணவர்கள் மறந்துவிடலாகாது. ஆத்துடன் சமூகத்தில் ஆங்கிலக் கல்வி அறிவுள்ளவனுக்கு தனி மரியாதை இருப்பதையம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.