தனித்து போட்டியிட கருணா அணி தீர்மானம்: பஷிலுடன் இணக்கப்பாடு!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து பஷில் ராஜபக்ஷ தரப்பினருடன் விரிவாக கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிரணி ஆதரவு பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவை, பத்தரமுல்லயில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கருணா, அதன் பின்னர் ஊடகங்களிடம் இதனைக் கூறியுள்ளார்.

தமது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாகவும் நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்தும், இச் சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கருணா மேலும் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக, மாகாணசபை தேர்தலை 50:50 விகிதாசார அடிப்படையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அதனால் தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றித்து செயற்படும் சூழல் காணப்படுவதாகவும் கருணா இதன்போது குறிப்பிட்டார்.

எனினும், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் தமிழருக்கு இடம்கொடுக்காமல் பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனார்.

இந்நிலையில், தமது கட்சி இவ்விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எதிர்வரும் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள தீவிரமாக செயற்படுமென கருணா அம்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.