காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தணியக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருமேகக் கூட்டம் தொடர்ந்து காணப்படக்கூடும் அத்துடன் ஓரளவு கடும் காற்றும் வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு சப்ரகமுவ , வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக இப்பிரதேசங்களில் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறும் பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 19ம் திகதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த வருடம் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 29 சதவீதம் அதிகளவில் மழை பதிவாகியுள்ளது.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இருப்பினும் ஓடை, கால்வாய் மற்றும் ஏரி, குளங்களை சரிவர அரசு தூர்வாராதது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணங்களால் அதிக மழை பெய்தும் நிலத்தடி நீர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை.

இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் இயல்பைவிட 111 சதவீதம் அதிகம் மழை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.